சிஏபிஎப் மசோதா கேடர் அதிகாரிகளை 2ம் தர குடிமக்களாக தரம் தாழ்த்தும்: அமித்ஷாவுக்கு அதிகாரிகள் கடிதம்

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஆயுத காவல் படைகளான (சிஏபிஎப்) சிஆர்பிஎப், பிஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி மற்றும் சிஐஎஸ்எப் ஆகியவற்றை நிர்வகிப்பதற்காக சிஏபிஎப் பொது நிர்வாக மசோதா மாநிலங்களவையில் கடந்த வாரம் அறிமுகப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2022ல் பீகாரில் நடந்த நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது வெளிப்படுத்திய அசாதாரண வீரத்திற்காக நாட்டின் 3வது உயரிய அமைதிக்கால வீரதீர விருதான சவுரியா சக்ராவை பெற்ற சிஆர்பிஎப் உதவி கமாண்டர் பிபூர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், மசோதாவின் விதிகள் அழுத்தமானவை என்றும், நிபுணத்துவம், கள அனுபவத்தை விட அலுவலகப் பணி மற்றும் நிர்வாக பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் தங்களால் சுயமரியாதையுடன் சேவையை தொடர்வது சாத்தியமற்றதாகிவிடும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர். இயக்குநர் ஜெனரல் மற்றும் சிறப்பு இயக்குநர் ஜெனரல் ஆகிய உயர்பதவிகள் 100 சதவீதம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், முழுமையான தகுதியும் நீண்ட கால சேவையும் கொண்டிருந்தாலும், கேடர் அதிகாரிகளால் ஒருபோதும் தலைமைப் பொறுப்பை வகிக்க முடியாது. இது அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக தரம் தாழ்த்திவிடும் எனவே மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

* தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்
மத்திய ஆயுத காவல் படைகள் பொது நிர்வாக மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடந்தது. அப்போது எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் திருச்சி சிவா (திமுக), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), முகமது நதிமுல் ஹக் (திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் யாதவ் (ஆர்ஜேடி) மற்றும் முஜிபுல்லா கான் (பிஜேடி) ஆகியோர், ‘‘நாட்டிற்காக சிஏபிஎப் வீரர்கள் ஆற்றிய பணி மற்றும் தியாகங்களுக்கு அரசு உரிய மரியாதை அளிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். இம்மசோதாவை நாடாளுமன்றத்தின் தேர்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் அல்லது எதிர்க்கட்சிகள் முன்மொழிந்துள்ள பல்வேறு திருத்தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: