புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாக்கஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான ரஹீம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட இந்த சட்டப்பேரவை தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். இதை தொடர்ந்து நேற்று மேற்கு வங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் கட்சியின் பொதுச் செயலாளருமான குலாம் அகமது மிர், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுபங்கர் சர்க்கார் மற்றும் பல முக்கியத் தலைவர்கள் முன்னிலையில், ரஹீம் முறைப்படி காங்கிரஸில் இணைந்தார்.
அவரை கட்சிக்குள் வரவேற்றுப் பேசிய மிர், ‘மேற்கு வங்க அரசியலில் அப்துர் ரஹீம் ஒரு நன்கு அறியப்பட்ட பெயர். தனது தொகுதியில் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் பொதுச் சேவையின் மூலம் அவர் மிகுந்த நற்பெயர் பெற்றவர். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் காங்கிரஸில் இணைவதன் மூலம், தனது தொகுதியின் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பணியாற்ற அவர் விரும்புகிறார். காங்கிரஸ் குடும்பத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்’ என்றார். அதை தொடர்ந்து பாதுரியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
