எடப்பாடி பிரசாரத்தை மாஜி அமைச்சர் புறக்கணிப்பு

கடையநல்லூர்: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தென்காசி மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கடையநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். அவர் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். சங்கரன்கோவில் தொகுதியில் இந்த முறை புதுமுகமாக திலிபன் ஜெய்சங்கர் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் சங்கரன்கோவில் தொகுதிக்கு மீண்டும் சீட் கிடைக்காத அதிருப்தியில், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, எடப்பாடியின் கடையநல்லூர் பிரசாரத்தை புறக்கணித்தார். ஆனால் கடையநல்லூரில் பிரசாரம் செய்த எடப்பாடி முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியின் பெயரை குறிப்பிட்டார். அவர் வராத நிலையில் பெயரை குறிப்பிட்டதால் அதிமுகவினர் ராஜலட்சுமியை தேடினர். அப்போதுதான் அவர் பிரசாரத்தை புறக்கணித்தது தெரியவந்தது.

* எடப்பாடி வாகனத்தில் பறக்கும்படை சோதனை
எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வந்தார். வழியில் கழுகுமலை அருகே தென்காசி மாவட்டம் குருவிகுளம் காவல் நிலையத்திற்குட்பட்ட கரட்டுமலை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் எடப்பாடி பழனிசாமி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அவரது வாகனம் செல்ல தேர்தல் பறக்கும்படையினர் அனுமதித்தனர்.

Related Stories: