சென்னை: பட தயாரிப்பாளருக்கு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வரும் படத் தயாரிப்பாளர் எஸ்.எல்ரெட் குமார் என்பவர் கடந்த 2013ல் தாக்கல் செய்திருந்து மனுவில், நடிகர் சிம்புவை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டு அந்த படத்தை இயக்குவதற்காக பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனை சந்தித்து ரூபாய் 4 கோடியே 25 லட்சம் கொடுத்தேன். இதுதொடர்பாக 2008ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடந்து கொள்ளவில்லை. அவர் எனக்கு எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. இதையடுத்து, கொடுத்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று கேட்டபோது இயக்குனர் கவுதம் வாசுமேனன் பணத்தை வழங்கவில்லை. படத்தையும் இயக்கவில்லை. எனவே, நான் கொடுத்த தொகையை திருப்பி தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.4 கோடியே 25 லட்சத்தை மனுதாரர் எல்ரெட் குமாருக்கு வழங்குமாறு 2022ம் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட எல்ரெட் குமார் சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் பாபு ஆஜரானார். இந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும். அந்த உத்தரவின்படி பட தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு 4 கோடியே 25 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து கவுதம் வாசுதேவ் மேனன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
