சென்னை: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் மற்றவர்களை போல தேமுதிகவும் விட்டுக் கொடுக்கும் என்று பிரேமலதா கூறினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் இளங்கோவன், பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், சந்திரன், சுபாரவி ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அளித்த பேட்டி: முக்கியமான சூழலில் நடக்கும் மிக முக்கிய கூட்டம் இது. தலைமை சார்பில் எங்கள் ஆலோசனையை வழங்கியிருக்கிறோம். விருப்பமனு வழங்கியவர்களின் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உரியவர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பும், மற்றவர்களுக்கு வரும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும். எங்கள் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.
தேமுதிக நிர்வாகிகள் விரும்பியபடியே கூட்டணி அமைத்திருக்கிறோம். திமுகவில் மற்ற கட்சிகள் கூட்டணி உறுதியான பின்பாக எங்களை அழைப்பார்கள். எங்களை அழைத்துப் பேசவில்லை என்று சொல்வது கற்பனை செய்தி. ஓரிரு நாட்களில் அழைப்பார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தான் தேமுதிக புதுச்சேரியில் போட்டியிடும். தேமுதிகவில் 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். 234 தொகுதிகளிலும் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. அனைத்து தொகுதிகளுமே எங்கள் களம் தான். தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறியதாக சொல்கிறார்கள். இன்னும் பேசுவதாக சொல்கிறார்கள். இன்னும் ஒரு வார காலம் இருக்கிறது. மீண்டும் பேசுவதாக சொல்கிறார்கள். வரலாம், போகலாம். அதுபற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. மற்றவர்கள் விட்டுக் கொடுக்கும் பொழுது தேமுதிகவும் விட்டுக் கொடுக்கும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு கூட்டணி வெற்றிகரமாக செல்ல வேண்டுமானால் மற்றவர்கள் விட்டுக்கொடுக்கும் போது தேமுதிகவும் விட்டுக்கொடுக்கும்.
தேமுதிக சார்பில் போட்டியிட விசுவாசம் தான் முக்கியம். அவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும். கட்சியில் விசுவாசம் இருப்பவர்களுக்கு தான் கட்சியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நான் கூறினேன். அப்படி இருப்பவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். மத்தியில் பாஜ ஆட்சி 15 வருடமாக இருக்கிறது. அங்கேயும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லுகிறார்கள். அதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும். குறிப்பாக சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அவர் பதில் சொல்லட்டும். அதன் பின்பாக விமர்சனம் செய்யட்டும்.
கேப்டன் சார்பில் 28 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். 234 தொகுதிகளிலுமே என்னை போட்டியிட நிர்வாகிகள் விருப்பமனு தாக்கல் செய்தனர். கொஞ்சம் காத்திருங்கள், நான் மட்டுமல்ல, யார் எந்த தொகுதி என்பது குறித்து 5 நாட்களில் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
