சென்னை: அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதால் திமுக கூட்டணி 44.9 சதவீத வாக்குகளுடன் 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என அக்னி நியூஸ் சர்வீசஸ் அமைப்பின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், தமிழ்நாட்டின் தேர்தல் நிலவரம் குறித்து பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை அக்னி நியூஸ் சர்வீசஸ் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஆர்.சுரேஷ் குமார் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தென் மண்டலத்தில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் 42 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையிலும் 16 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளன. மத்திய மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் 35 தொகுதிகளில் திமுக கூட்டணியும் 2 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. மேற்கு மண்டலத்தில் உள்ள 50 தொகுதிகளில் 32 தொகுதிகளில் திமுக கூட்டணியும் 18 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. வடக்கு மண்டலத்தில் உள்ள 52 தொகுதிகளில் 35 தொகுதிகளில் திமுக கூட்டணியும் 17 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் முன்னணியில் உள்ளன.
சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் திமுக கூட்டணி 36 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி ஒரு தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 6 சதவீத வாக்குகள் வித்தியாசம் இருப்பதால் திமுக அணிக்கு அமோக வெற்றி கிடைக்கும். 180 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 54 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக திமுக 44.9 சதவீத வாக்குகளையும் அதிமுக 38.6 சதவீத வாக்குகளையும், தமிழக வெற்றி கழகம் 9.7 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 4.8 சதவீத வாக்குகளையும், பிற 2.1 வாக்குகளையும் பெறுவார்கள். தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒரு மாய உலகத்தில் உள்ளனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தோல்வி அடைவார். பெரம்பூரில் விஜய் இரண்டாம் இடம் பிடிப்பார். வேளச்சேரியில் தவெகவுக்கு 18 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதேபோல் சென்னையில் அதிமுகவின் வாக்குகளை தவெக கைப்பற்றும். சென்னை மாநகரில் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் தவெகவை நோக்கி நகர்கின்றன. நகர்ப்புறங்களில் மட்டும் தவெகவுக்கு ஆங்காங்கே வாக்குகள் உள்ளன. காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி அடைவார்.
பெண்கள் திமுக ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த தேர்தலில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களின் வாக்கு திமுகவிற்கு உள்ளது. பெண்களுக்காக திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் பெண்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 49 சதவீதம் பெண்கள் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது என கருதுகின்றனர். அரசு வழங்கிய ரூ.5,000 பெண்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 2019ம் ஆண்டு முதலே பெண்கள் வாக்குகள் திமுகவுக்கு அதிகரிக்க தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மக்களிடம் ெசன்று சேர்ந்துள்ளதால் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து தான் போதைப்பொருள் தமிழ்நாட்டுக்கு வருகிறது என்று பொதுமக்கள் களத்தில் கூறுகின்றனர். ஒன்றிய அரசுக்கு தெரியாமல் போதை பொருள் தமிழ்நாட்டிற்குள்ளே வருமா என்று பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். அரசு ஊழியர்களும் திமுக தான் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். முதலமைச்சர் செல்வாக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தான் அதிக அளவு உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் செல்வாக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
