ரம்ஜான் கடந்த 21ம் தேதி கொண்டாடப்பட்டது. முன்னதாக கடந்த 20ம் தேதி இரவு சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 52வது வார்டு சண்முகா நகர் தென்றல் திருமண மண்டபத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு, இஸ்லாமியர்களுக்கு டிபன் பாக்ஸ்கள் பரிசாக வழங்கினார். இந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சேலம் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சேலம் தெற்கு தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்வேந்தன், அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, சூரமங்கலம் பகுதியில் 2 இடங்களில் நடந்த ரம்ஜான் தொழுகையின் போது விசில் சின்னம் அடங்கிய 805 வாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தவெக பகுதி செயலாளர் சங்கரநாராயணன் உள்பட 3 பேர் மீது சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
