அரசியல் பரபரப்புக்கு இடையே திமுக, அதிமுக முக்கிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு: விசிகவுடன் இன்று ஒப்பந்தம்

 

சென்னை: தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக திமுக, அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. விசிகவுடன் இன்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜ 27, பாமக 18, அமமுக 11 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறிய கட்சிகள் முரண்டு பிடிப்பதால் அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் வருகிற 30ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 6 நாட்களும், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமும் இருக்கிறது. இதையொட்டி தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் மாநிலக்குழுச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று தொகுதி உடன்பாடு குறித்து பேசினார். பின்னர் மாலையில் மாநில நிர்வாகிகளுடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதில், பாஜவை வீழ்த்த திமுக கூட்டணியில் தொடர்ந்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் குழு சந்தித்துப் பேசியது. அப்போது இரு கட்சிகளுக்கும் உடன்பாடு கையெழுத்தானது. தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:
2026 சட்டப்பேரவை தேர்தலில் மதவாத சக்தியான பாஜ, அதற்கு துணை போகக்கூடிய அதிமுக உள்ளிட்ட அணியை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இரண்டு அணிகளுக்கு இடையே தான் தேர்தல் என்பது மார்க்சிஸ்ட் கட்சி பல ஆண்டு காலமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் செயல்பட்டு வருகிறது. இந்த 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திப்பது என்று தொடர்ச்சியாக சொல்லி வந்தோம். அதேநேரத்தில் இந்த அணியில் இருந்து போட்டியிடுவது என்பது எவ்வளவு முக்கியமோ? அதே சமயத்தில் கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. அதைவிட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது மாநிலக்குழுவின் முடிவு அதற்கான முயற்சிகளை கட்சியின் சார்பில் திமுக தலைமை மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்தது. இருந்தாலும் அதிகமான கட்சிகள் இந்த அணியில் இடம் பெற்று இருப்பதும் புதிதாக கட்சிகள் சேர்ந்து இருப்பதும் அனைவரும் தொகுதிகளை பகிர்ந்து அளிக்க வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் கேட்கக்கூடிய தொகுதிகளை தர முடியவில்லை என்றும் திமுக சார்பில் தெரிவித்தனர். ஆகவே 6 என்பதை ஒன்று குறைத்து 5 தொகுதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதித்து எந்த விதத்திலும் பாஜ, அதிமுக கூட்டணிக்கு உதவி செய்யக்கூடிய வகையில் இருந்து விடக்கூடாது, நாங்கள் எடுக்கக்கூடிய முடிவு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒற்றுமைக்கு குந்தகம் வந்து விடக்கூடாது என்ற அக்கறையோடு திமுக வழங்க முன்வந்துள்ள 5 என்ற எண்ணிக்கையை ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்து அதன்அடிப்படையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில செயலாளர் நானும் கையெழுத்திட்டுள்ளோம்.

இந்த எண்ணிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை, அதேநேரத்தில் ஏற்கனவே கூறிய காரணத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வது என்கிற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த உடன் படிக்கையின் அடிப்படையில் நடைபெறும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த அணி மகத்தான வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும். 6 தொகுதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினோம். அப்போது முதல்வர் தங்களுக்கு உள்ள சிரமங்களை கூறி 5 தொகுதிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மற்ற கட்சியினருடன் பேசி முடிக்க வேண்டும் என்றும், இது முடிவு இல்லாமல் நீடித்துக் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். போட்டியிட விரும்பக்கூடிய தொகுதிகளின் பட்டியலை முதல்வரிடம் வழங்கியுள்ளோம், கந்தவர்கோட்டை, கீழ்வேளூர் உள்பட போட்டியிடக்கூடிய பட்டியலை வழங்கியுள்ளோம். அதற்கான சந்தர்ப்பம் வரும்போது பேசலாம், கவனத்தில் வைத்துக் கொள்வதாக கூறினார்.

பாஜ பல கட்சிகளை காணாமல் போகக்கூடிய செயல்களை செய்துள்ளது. அதேபோன்று, அதிமுகவிற்கு அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையில் தான் இப்போதும் கூறுகிறோம். சென்னைக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பட்டியலை கொடுத்துள்ளோம். கூட்டணியின் ஒற்றுமை சீரழிந்து விடக்கூடாது என்பதற்கும், அதற்கு மார்க்சிஸ்ட் முடிவு காரணமாக அமைந்து விடக்கூடாது.இவ்வாறு பெ.சண்முகம் கூறினார். இந்த நிலையில், விசிகவுடன் இன்று ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு 28, மார்க்சிஸ்ட் 5, இந்திய கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, மமக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் தலைமை தாங்குவதாக அக்கட்சியினர் கூறி வருகிறார்கள்.

ஆனாலும், அதிமுக – பாஜ கூட்டணி குறித்து சென்னையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவில்லை. ஒவ்வொரு முறையும் அமித்ஷா, எடப்பாடியை டெல்லிக்கு அழைத்தே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதுவரை 3 முறை எடப்பாடி டெல்லி சென்று வந்துள்ளார். ஆனாலும், தொகுதி பங்கீடு மற்றும் எந்தெந்த கட்சிகள் யார் தலைமையில் கூட்டணி என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இறுதியாக கடந்த 19ம் தேதி எடப்பாடி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு திரும்பியபோது, இன்னும் 4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறினார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ, அன்புமணி தலைமையிலான பாமக, டி.டி.வி.தினகரனின் அமமுக, ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. கடந்த சட்டமன்ற தேர்தலில் 179 இடங்களில் போட்டியிட்ட அதிமுக இந்த முறை 170 இடங்களுக்கும் குறையாமல் களம் இறங்க திட்டமிட்டு வந்தது. அதற்கு ஏற்ற வகையிலேயே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி பாஜ தலைமையிடம் தெரிவித்து இருந்தார். இதை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இதையடுத்து தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல் மீண்டும் 23ம் தேதி (நேற்று) சென்னை வர உள்ளதாகவும், அப்போது எடப்பாடியை சந்தித்து பேசி கூட்டணி இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும் என்றும் தகவல் வெளியானது. அதன்படி தமிழக பாஜ மேலிட பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் நேற்று காலை 10 மணிக்கு சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த பியூஷ் கோயலை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின்னர் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொகுதி பங்கீடுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதி பங்கீட்டு விவரங்களை இன்றே அறிவிப்போம். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தியடையும் வகையில் தொகுதி பங்கீடு அமையும். நாங்கள் அனைவரும் ஒன்றாக ஒரே குடும்பமாக உள்ளோம். தேர்தல் பிரசாரம் தொடங்கியதும் பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதையடுத்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் சென்றனர். அங்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பியூஷ் கோயலுக்கு பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அவர்களை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் அதிமுக கட்சி அலுவலகம் வந்தனர். அவர்களை முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வரவேற்று அழைத்து சென்றனர். இதையடுத்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தமமுக தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி உள்ளிட்ட தலைவர்கள் வரிசையாக உட்கார்ந்து இருக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக நடைபெற்றது. பாஜவுக்கு 27 இடங்கள், பாமகவுக்கு 18 சட்டமன்ற ெதாகுதி, அமமுகவுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் எங்களுடன் கூட்டணியில் உள்ள தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து தொகுதி உடன்பாடு எட்டப்படும். எங்கள் கூட்டணி உணர்வுப்பூர்வமான கூட்டணி. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். நான் டெல்லிக்கு சென்றால் திட்டமிட்டு முதல்வர் அவதூறு பரப்புகிறார். கருத்து பரிமாற்றம் செய்யவே டெல்லி சென்றோம். டெல்லி சென்று வருகின்றபோது தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்துகிறோம். எங்கள் கூட்டணி தலைவர்கள், அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எத்தனை தொகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி எந்தெந்த இடங்களில் போட்டி என்று விரைவில் முடிவு காணப்படும். எங்கள் கூட்டணியில் தொகுதி உடன்பாட்டை விரைவில் முடித்துள்ளோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் இருந்து இன்று (நேற்று) காலையில்தான் வந்தார்கள். மதியத்திற்குள் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி கூறும்போது, ”அதிமுக கூட்டணியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 18 இடங்களில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவோம்” என்றார். அதேபோன்று டி.டி.வி.தினகரன் கூறும்போது, ‘‘அதிமுக கூட்டணியில் 11 இடங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 11 இடங்களிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம்” என்றார்.

 

Related Stories: