தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகாவுக்கு 2 சீட்? கட்சியினர் அதிர்ச்சி: ஜி.கே.வாசன் இன்று முக்கிய ஆலோசனை

 

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில், தமாகாவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இன்று ஆலோசித்து முக்கிய முடிவை ஜி.கே.வாசன் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவிடம், பாஜ கூடுதல் தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வந்ததால் தொகுதி பங்கீடு முடிவடையாமல் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் ஒன்றிய பாஜ அமைச்சர் பியூஸ் கோயல் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வகையில் நேற்று சென்னை வந்தார். அவர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகாவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் எழுந்தது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை அதிமுக, பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமாகா சந்தித்தது.

அந்த தேர்தலில் தமாகா 6 இடங்களில் போட்டியிட்டது. அடுத்து 2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 3 இடங்களில் தமாகா நின்றது. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமாகாவுக்கு 12 தொகுதிகளை கேட்டு, 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோரிடம் கொடுத்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகாவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்தது 6 தொகுதிகளாவது வேண்டும் என்று ஜி.கே.வாசன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் முதலில் தகவல் வெளியானது. தற்போது இவ்வளவு குறைவான தொகுதி என்பது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று சென்னை வந்த பியூஸ் கோயலை, ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் 2 தொகுதிகள், இரட்டை இலை அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற வற்புறுத்தலுக்கு தனது கடுமையாக வருத்தத்தை பதிவு செய்தார். மேலும் கூடுதலாக சீட்டை ஒதுக்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினார். அப்போது கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கப்படும். அப்படி ஒதுக்கப்படும் பட்சத்தில் இரட்டை இலை அல்லது தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் பியூஸ் கோயல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஜி.கே.வாசன் கடும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமாகா நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

 

Related Stories: