சென்னை: பாஜவில் பொறுப்பு வழங்க கோரி நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து சரத்குமார் கடிதம் அளித்தார். பாஜவின் முடிவை பொறுத்தே ஆதரவாக பிரசாரம் குறித்து முடிவு எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் கடந்த 2024ம் ஆண்டு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பாஜவுடன் இணைத்தார். அப்போது, அவருக்கு பாஜவில் தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவிலான பொறுப்புகள் ஏதும் அவருக்கு வழங்கப்படவில்லை. சரத்குமாருக்கு தேசிய அளவிலான பொறுப்புகள் வழங்காதது அவருடைய ஆதவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள், ‘மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். அப்போது தான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய பொறுப்புகள் இல்லாததால் தேர்தல் களத்தில் செயல்படுவது சிரமமாக இருக்கிறது. உங்களுக்கு அங்கீகாரம் வழங்கா விட்டால் பாஜவில் எங்களுக்கு வழங்கிய பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட தயாராக இருக்கிறோம்’ என சரத்குமாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து பாஜவில் பொறுப்பு வழங்காமல் எப்படி செயல்பட முடியும் என்றும், அடுத்தக்கட்ட முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் சரத்குமார் தெரிவித்தார். மேலும் தேர்தலுக்கு முன்பு பொறுப்புகள் வருவது அவசியம் என்றும் பிரதமர் மோடியின் மீது கொண்ட பற்றால் மட்டுமே நான் பாஜவில் இணைந்தேன் என்று பொறுப்பு இல்லாமல் எப்படி செயல்படுவது என்று எனக்கு தெரியவில்லை என சரத்குமார் தெரிவித்தார். இந்நிலையில், பாஜவில் பொறுப்பு வழங்ககோரி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சரத்குமார் நேற்று கடிதம் வழங்கினார். அதன்பின்னர் சரத்குமார் கூறுகையில், “இன்றைய சந்திப்பு சுமுகமாக நடந்தது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்துள்ளார். எங்களின் கோரிக்கைகளை கடிதமாக கொடுத்துள்ளோம். பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். நல்லதே நடக்கும். நம்பிக்கை இருக்கிறது. பாஜவின் முடிவை பொறுத்தே அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்து முடிவு எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
