சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம், கடந்த ஜனவரியுடன் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திருவள்ளூரை சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனுவில், சட்டமன்ற தேர்தலுடன் உள்ளாட்சி தேர்தலும் நடத்துவதன் மூலம் அரசுக்கு செலவு குறையும். பொதுமக்களின் நேரம் மிச்சப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டதே என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதற்கு எதிர்காலத்தில் இத்திட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கலாம் என்று மனுதாரர் குறிப்பிட்டார்.இதைக்கேட்ட நீதிபதிகள், 5 ஆண்டுகளுக்கு பின்னர் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனுதாரர் முறையிடலாம் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து, மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
