சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான 11.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை காப்புரிமை மீறல் புகார் தொடர்பான வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான 11.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதையடுத்து, சொத்து முடக்கத்தை எதிர்த்து ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நபர் புகார் வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கக்கூடாது என்று தெரிவித்து, சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் சங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ் ராமன், சங்கருக்கு எதிரான வழக்குகளை புகார்தாரர் திரும்பப் பெற்றுள்ளதால் மூல வழக்கு எதுவுமில்லை என்று தெரிவித்தார். அப்போது, இதுகுறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை கால அவகாசம் கோரியது. இதையடுத்து விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
