* அடித்தே கொன்றதாக நீதிபதி 265 பக்க தீர்ப்பு
* அதிமுக ஆட்சியில் நடந்த வழக்கில் அதிரடி
* மார்ச் 30ம் தேதி தண்டனை விபரங்கள் அறிவிப்பு
மதுரை: தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்றும், இவர்களுக்கான தண்டனை விபரம் மார்ச் 30ம் தேதி வழங்கப்படும் எனவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (59). வியாபாரி. இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் இருவரும் கடந்த 19.6.2020 அதிமுக ஆட்சி காலத்தில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் இரவில் நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்தால், சாத்தான்குளம் போலீசார் காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ். சிறப்பு எஸ்ஐ பால்துரை, போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், சாமத்துரை, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது பால்துரை இறந்தார். இதனால் மற்ற 9 பேர் மீதான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. சிபிஐ தரப்பில் முதல்கட்டமாக 2,027 பக்கங்கள், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டாக இங்கு நடந்து வந்த விசாரணை கடந்த 16ம் தேதி முடிந்தது. மார்ச் 23ல் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜி.முத்துக்குமரன் அறிவித்தார்.
இதன்படி இந்த வழக்கில் நீதிபதி ஜி.முத்துக்குமரன் நேற்று மாலை தீர்ப்பளித்தார். இதற்காக சிறையில் உள்ள 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். சுமார் 265 பக்க தீர்ப்பை சுமார் ஒன்றரை மணி நேரம் நீதிபதி வாசித்தார். அதில், ‘‘ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. மரணங்களை விளைவிக்க கூடிய வகையில் காயங்கள் இருந்தது. அதனால் தந்தை, மகன் ஆகிய இருவரின் உயிரிழப்பும் கொலை என சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை பதிவு செய்துள்ளது.
வீடியோவில் பதிவு: பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்புறம் இருந்த காயம் பலமுறை தாக்கியதால் ஏற்பட்ட காயம் என்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பென்னிக்ஸ், ‘தன்னை இரவு முழுவதும் பத்து நிமிடம் இடைவெளி விட்டுவிட்டு தொடர்ந்து தாக்கினர். 200 முறைக்கு மேல் தாக்கினர்’ என உறவினரிடம் கூறியதாக குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால் தான் இருவரையும் மற்ற காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.
தொங்க விட்டு தாக்குதல்: கைகளை கயிற்றால் கட்டி மேலிருந்து தொங்கவிட்டு தாக்கி உள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. டேபிளில் படுக்க வைத்தும் தாக்கி உள்ளனர். இருவரையும் காவல்துறையினர் தாக்கும் போது நாம் அடித்து பழகுவதற்கு அப்பா, மகன் கிடைத்துள்ளனர் எனவும், இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என்றும் காவல்துறையினர் அவர்களுக்குள் பேசியுள்ளனர். முதல் எதிரியான ஸ்ரீதர், அடிக்கச் சொல்லி கூறினார். அடிப்பதை யாரும் பார்க்கிறார்களா என்பதை கண்காணிக்க காவல் நிலையத்தில் வெளியே இருந்து தாமஸ் பிரான்சிஸ் கண்காணித்து வந்தார் என குற்றப்பத்திரிகையில் உள்ளது. உஜெயராஜிற்கு இரதய மற்றும் நுரையீரல் பிரச்னை இருந்தது. ஆனால் நோய் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை. கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியுள்ளனர்.
ஆங்கிலேயர் காலம் போல…
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தான் எந்தவித சட்ட விதிகளையும் பின்பற்றாமல், குடிமக்களை தாக்குவது, கொலை செய்வது போன்றவை நடக்கும். அதற்கு இணையாக இந்த சம்பவம் நடந்துள்ளது. அதனை மறைக்க போலி ஆவணங்கள் தயாரித்து பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது அனைத்தும் உண்மை தான். சாட்சிகள் அனைவரும் குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக சாட்சியம் அளித்துள்ளனர். இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து தாக்கி கொண்டே இருந்தனர்.
ரத்தக்கறை ஆடை: காவல்துறையினர் நினைத்திருந்தால் அவர்கள் செய்த தவறை திருத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் அனைவரும் ஒரே பகுதியில் தான் இருந்தார்கள் என்பதை செல்போன் டவர் மூலமாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரும் அணிந்திருந்த ஆடைகள் வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ரத்தக்கறை படிந்த ஆடையை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத்தொட்டியில் போட சொல்லியுள்ளனர். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அந்த ஆடையை கைப்பற்றி வழக்கு விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது.
தடயங்கள் அழிப்பு: அனைத்து தடயங்களையும் குற்றம் சாட்டப்பட்டோர் அழித்துள்ளனர். அனைத்து தரப்பு விசாரணைகளையும் பார்க்கும் போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 9 பேரின் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் கொலை குற்றவாளிகள் என தீர்மானிக்கப்படுகிறது. முதல் குற்றவாளியான ஸ்ரீதர், விசாரணையின் போது ஆதார் ஆவணங்களை திருத்தி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து தனியாக விசாரிக்கப்படும். காவல்துறையைச் சேர்ந்த 9 பேருக்கும் என்ன தண்டனை வழங்கலாம்? இவர்களின் முந்தைய நடத்தை என்ன என்பது குறித்து ஒன்றிய, மாநில அரசுகளின் தொடர்புடைய அதிகாரிகள் வரும் 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 9 பேரின் சொத்து ஆவணங்களை அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் தாக்கல் செய்ய வேண்டும். சம்பள விபரங்களை எஸ்பிக்கள் தாக்கல் செய்ய வேண்டும். தண்டனை விபரங்கள், இழப்பீடு அந்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்’’ எனக்கூறி வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
* தன்னை இரவு முழுவதும் பத்து நிமிடம் இடைவெளி விட்டுவிட்டு தொடர்ந்து தாக்கினர். 200 முறைக்கு மேல் தாக்கினர்.
* இருவரையும் காவல்துறையினர் தாக்கும் போது நாம் அடித்து பழகுவதற்கு அப்பா, மகன் கிடைத்துள்ளனர் எனவும், இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என்றும் காவல்துறையினர் அவர்களுக்குள் பேசியுள்ளனர்.
* உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்:ஜெயராஜ் மகள் பேட்டி
ஜெயராஜின் மகள் பெர்ஷி கூறியதாவது, ‘‘எனது அப்பா மற்றும் தம்பி இருவரையும் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதாகவும், அனைவரும் அடித்ததால்தான் மரணம் ஏற்பட்டிருக்கிறது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த ஒரு நாளுக்காகத்தான் அலைந்தோம். இதற்கான நீதி கிடைத்திருக்கிறது. 30ம் தேதி என்ன தண்டனை கிடைக்கிறது என காத்திருக்கிறோம், நீதிபதியையும், நீதிமன்றங்களையும் நம்புகிறோம். இவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என நம்புகிறோம். இந்த தண்டனைகள் மூலம் இனிமேல் இதுபோன்று யாரும் பாதிக்கப்படக்கூடாது. இனிமேல் இதுபோன்று செய்பவர்கள் பயப்படுவார்கள். 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
என் தம்பிக்கு 31 வயது. அவரை அடித்துக் கொன்றிருக்கிறார்கள். அப்போதுதான் வாழ்க்கையை தொடங்கினார். அதிகாரத்தினால் அவனுடைய வாழ்க்கையை மொத்தமாக அழித்து விட்டார்கள். அதனை நினைக்கும் போது உயிரோடு இருக்கிற வரை எங்களுக்கு வேதனையாகத்தான் இருக்கும். அப்பா முன்பு தம்பியையும், தம்பி முன்பு அப்பாவையும் தாக்கியுள்ளனர். அடிப்பதை ரசித்திருக்கிறார்கள். ஒரு ஃபிரஷ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம் என கூறிய இவர்களுடைய மனநிலை கொடூரமானது. எங்களுக்காக போராடி, குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி’’ என்றார். ஜெயராஜ் மனைவி செல்வராணி, ‘‘அனைவரும் எங்களுடன் சேர்ந்து போராடியதால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.
