தஞ்சை பிரசாரத்தின்போது விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றவர் விஜய்யை பின்தொடர்ந்த மாணவன் உயிரிழப்பு

தஞ்சை: தஞ்சாவூர் அருகே அய்யாசாமிப்பட்டியில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் நேற்று மாலை இறந்தார். தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடந்த 4ம்தேதி நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தார். பின்னர் அங்கிருந்து, கூட்டம் நடைபெற்ற செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டிக்கு பிரசார வேனில் புறப்பட்டார்.

அவரது வாகனத்தை ரசிகர்கள் பலரும் டூவீலர்களில் திருச்சியிலிருந்து பின் தொடர்ந்து வந்தனர். இதில் பல இடங்களில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டும், கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறியும், பெண்கள் கீழே விழுந்த சம்பவங்களும் நடந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த திருச்சி தனியார் கல்லூரி மாணவர் மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த பாண்டியன் மகன் விக்னேஷ் (19), அவரது நண்பர் ஹாரூண் (20) இருவரும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.

இருவரும் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் விக்னேஷ் தலையில் படுகாயத்துடன் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மற்றொருவரான ஹாரூணுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி, எம்.பி. முரசொலி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். சிகிச்சைக்கு பண உதவியும் செய்தனர். விக்னேஷ் உடல்நிலை தேறி வந்த நிலையில் அவரது பெற்றோர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக தெரிவித்து கடந்த 20ம் தேதி தஞ்சையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்து சென்றனர். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை விக்னேஷ் உயிரிழந்தார். மகன் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்ணீர் விட செய்தது.

Related Stories: