சென்னை: தமிழ்நாட்டில் ராகுல், பிரியங்கா சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் ஆதரவோடு மீண்டும் திமுக ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் வளர்ச்சியை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகிற போது, அனைவரையும் பிரமிக்க வைக்கிற வகையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவிகிதமாகும்.
நாட்டின் சராசரி வளர்ச்சியை விட இது இருமடங்கு அதிகமாகும். தமிழ்நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் ரூ.3.62 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், தேசிய சராசரி வருமானம் ரூ.2.05 லட்சமாக குறைவான நிலையில் தான் இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை விட, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பது ஒரு மகத்தான சாதனையாகும். ஒன்றிய பாஜ அரசின் பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கிடையில் இத்தகைய சாதனைகளை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது.
இத்தகைய பாரபட்சமாக வஞ்சிக்கப்படுகிற நிலையில் தான் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற முதல்வரை தமிழக மக்கள் மனம் திறந்து பாராட்டி வருகிறார்கள். அவர் சுற்றுப்பயணம் செய்கிற இடங்களில் எல்லாம் மக்கள் அன்பை பொழிகிறார்கள். இதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய பாஜ அரசு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏவிவிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி வருகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை, முதல்வர் தலைமையில் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீடு ஓரிரு நாளில் நிறைவு பெறும். இக்கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. ஆனால், அதிமுக தலைமையிலான கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்று இதுவரை முழு விவரம் வெளிவரவில்லை. அங்கே குழப்பம் தான் அதிகரித்து வருகிறது. பாஜவை கொள்கை எதிரி என்று பிரகடனம் செய்த தவெக, கூட்டணிக்கு வருமா என்று திரைமறைவு பேரங்கள், அச்சுறுத்தல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை வெளிப்படைத்தன்மையோடு, ஒளிவு மறைவின்றி கூட்டணி கட்சிகள் ஒரே லட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் வரலாறு காணாத வளர்ச்சியை பெறச் செய்து மகத்தான சாதனைகளை படைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்த கோடிக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட மக்களின் பேராதரவோடு மீண்டும் ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. வகுப்புவாத சக்திகளின் கோயபல்ஸ் பிரசாரத்தை முறியடிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வருகை புரிந்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம் என்ற உணர்வோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கு, வரும் 36 நாட்களும் கண் துஞ்சாது, அயராது உழைத்து தமிழ்நாட்டில் வகுப்புவாத பாஜவை அதிமுக கூட்டணி மூலம் நுழைய விடாமல் தடுக்கின்ற மகத்தான களப் பணியில் ஓய்வறியாமல் உழைக்க காங்கிரஸ் கட்சியினரை அன்போடு அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
