சென்னை: பா.ஜ. எவ்வளவு கோபப்பட்டாலும், எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் இஸ்லாமியர்களுக்கு திமுக எப்பொழுதும் உங்களுக்கு உறுதியாக நிற்கும், காவல் அரணாக நிற்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை புதுக்கல்லூரியில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க ஆரம்பித்த நாளிலிருந்து இந்த இயக்கத்துக்கு நீங்கள் அத்தனை பேரும் பக்கபலமாக இருந்து வருகிறீர்கள். இன்றைக்கும் தலைவர்க்கும் நீங்கள்தான் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறீர்கள். நமக்குள் இருப்பது சகோதர பாசம் எவ்வளவு முயற்சிகள் நடந்தாலும், எவ்வளவு சூழ்ச்சிகள் நடந்தாலும் திமுகவுக்கும் இஸ்லாமியப் பெருமக்களுக்கும் இடையே இருக்கின்ற உறவை யாராலும் பிரிக்கவே முடியாது. ஆட்சியில் இருக்கும் போதும் சரி, இல்லாதபோதும் சரி எப்பொழுதுமே உங்களுக்கான முதல் குரல் கொடுக்கிற இயக்கம் திமுக மட்டும்.
சிறுபான்மை மக்கள் மேல் வெறுப்பை தினந்தோறும் ஒன்றிய பாஜ அரசு பரப்பிக்கொண்டே இருக்கிறது. அந்த வெறுப்பு பிரசாரத்தால்தான் இன்றைக்கு பா.ஜ. வளர்ந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.வின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி நாமெல்லாம் சேர்ந்து அன்பைப் பரப்ப வேண்டும், சகோதரத்துவத்தைப் பரப்ப வேண்டும். இந்த மண்ணில் அந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்யக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கின்ற வரைக்கும் பாஜவின் திட்டம் எதுவுமே தமிழ்நாட்டில் நிச்சயம் பலிக்கவே பலிக்காது.
திமுக மேல் சிறுபான்மை மக்களுக்கு இருக்கக்கூடிய அந்தப் பாசத்தையும் நம்பிக்கையையும் பா.ஜ.வால் இன்றைக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தி.மு.க மேல் இன்றைக்கு பா.ஜ. கடுங்கோபத்தில் இருக்கிறது. பா.ஜ. எவ்வளவு கோபப்பட்டாலும், எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் திமுக எப்பொழுதும் உங்களுக்கு உறுதியாக நிற்கும், காவல் அரணாக நிற்கும். ஆனால், சிறுபான்மை மக்களின் நலன் பற்றி கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் பா.ஜ.வுடன் இன்றைக்கு அதிமுக கைகோர்த்திருக்கிறது. இனி எப்பொழுதுமே பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி மறுபடியும் கூட்டணி வைத்திருக்கிறார். உங்களுக்கெல்லாம் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி செய்திருக்கக்கூடிய இந்த துரோகத்தைச் சிறுபான்மை மக்கள் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நிச்சயம் மன்னிக்கவே மாட்டார்கள்.
இன்றைக்கு பா.ஜ.வின் ஒரு முகமூடியாக அதிமுக மாறியிருக்கிறது. அடிமைக் கட்சிகளை எல்லாம் மிரட்டி இன்றைக்கு கூட்டுச்சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்துவிடலாம் என்று பா.ஜ முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தி.மு.க என்ற பலம்பொருந்திய கட்சி இருக்கின்ற வரைக்கும், நாம் இருக்கின்ற வரைக்கும் தமிழ்நாட்டை அவர்களால் நெருங்கவே முடியாது, தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. தலைவர், தி.மு.கவும் என்றைக்குமே உங்களுக்கு தோழனாக, துணையாக எப்பொழுதுமே இருப்போம். அதேபோல தலைவருக்கு இஸ்லாமியப் பெருமக்கள் நீங்கள் என்றைக்குமே ஆதரவாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்துதான் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்பாற்ற வேண்டும். சமூக நல்லிணக்கத்தை, ஒற்றுமையை வளர்க்க வேண்டும். வெறுப்பை ஒழித்து அன்பைப் பரப்ப வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
