தவெக தனித்து போட்டியில் உறுதி: புதுச்சேரி வேட்பாளர்களை இறுதி செய்தார் நடிகர் விஜய்

சென்னை: பாஜ மேலிடம் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி தவெக தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக உள்ளது. புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இறுதி செய்துள்ளார். நடிகர் விஜய், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட புதிய கட்சியை தொடங்கி, தமிழகத்தில் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறார். கட்சி நிர்வாகிகளுடன் பல கட்டங்கள் ஆலோசனை நடத்தி முடித்து விட்டார். இந்நிலையில் தமிழகத்தில் எப்படியும் தோற்றுவிடுவோம் என்று கருதும் பாஜ மற்றும் அதிமுகவினர் தவெகவினரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று தீவிரம் காட்டினர்.

குறிப்பாக நகர் பகுதிகளில் தவெக 2வது இடம் வகிப்பதால் அக்கட்சிக்கு பயம் வந்து விட்டது. இதனால் எப்படியாவது, எந்த விலை கொடுத்தாவது தவெகவை தனது கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ தீவிரம் காட்டியது.இதற்காக நடிகர் பவன்கல்யானையும் களத்தில் இறக்கியது. தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் நடிகர் விஜய்யோ, கூட்டணி தொடர்பாக யாரும் என்னை தொடர்பு கொள்ளக்கூடாது. என் தலைமையில் தேர்தலை சந்திப்பவர்கள் மட்டுமே எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், டெல்லிக்கு விசாரணைக்கு வரும்படி சிபிஐ அழைத்தது. சிபிஐ மூலம் தொல்லை கொடுத்தால் பயந்துபோய் கூட்டணிக்கு வருவார் என்று கணக்குப் போட்டது. ஆனால், விசாரணையை சந்திக்க தயார் என்று சுமார் 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணையில் ஒத்துழைப்பு கொடுத்த விஜய், கூட்டணி தொடர்பாக யாரையும் சந்திக்க மறுத்து விட்டார். அதேநேரத்தில் புதுவையில் பாஜ, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பங்கீடு முடிந்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் புதுவையில் தவெக தனித்துப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. புதுவை வேட்பாளர்களை அறிவப்பதற்காக நேற்று நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் வேட்பாளர்களை இறுதி செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியதால் புதுவைக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. புதுவையில் கூட்டணி இல்லை என்பதால், தமிழகத்திலும் அதே நிலையை கடைபிடிக்க விஜய் முடிவு செய்துள்ளார். ஆனால் அதிமுகவின் ஐடி விங்க் மற்றும் சில யூடியூபர்கள் மூலம் தகவல்களை கசியவிட்டு கூட்டணிக்குள் விஜய்யை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் அதிமுக இறங்கியது. ஆனால் அதற்குள் விஜய் இடம் கொடுக்கவில்லை. அவர் ஏற்கனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை இறுதி செய்து விட்டார். விரைவில் வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக தலைமையில்தான் கூட்டணி. முதல்வர் வேட்பாளர் விஜய், என்பதில் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், தலைவர்களும் உறுதியாக உள்ளனர். கூட்டணியில் சேர்ந்தால், தவெக காணாமல் போய்விடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்கனவே தொண்டர்களுக்கும், மக்களுக்கும் அளித்த உறுதிமொழிபடி தனித்துப் போட்டி என்பதால் விஜய் உறுதியாக இருப்பதாகவும், ஒரு முடிவை அவர் எடுத்துவிட்டால் அந்த முடிவில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: