அன்னூர், பிப்.28: கோவை – சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அன்னூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இதில் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பெரும்பாலான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இந்த மழையால் சாலையோரத்தில் மழை நீர் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கிறது.
காவல் நிலையத்தில் துவங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சாலையோரமுள்ள பள்ளங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சாலையின் ஒரு பகுதியை மழை நீர் ஆக்கிரமிக்கிறது. இந்த மழைநீர் சரியான வடிகால் வசதி இல்லாததால் சாலையோரமாக செல்லும் பாதசாரிகள் மீது தெளிக்கிறது. இதனால் சாலை அரிப்பு ஏற்படுகிறது.
இதனால் அவ்வழியாக பயணிக்கும் வாகனங்கள் மழைநீர் தேங்கியிருக்கும் பாதையை பயன்படுத்தாமல் செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. சிறிதளவு சாலையையே பயன்படுத்த முடிகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
