கோவை, பிப்.27: வருவாய் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நேற்று 2வது நாளாக நடந்தது.
90 சதவீத அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருவதால் தாசில்தார் அலுலவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், நில அளவை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் அலுவலர்கள் இல்லாததால் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
