பாதி தீயில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு; கோவை அருகே பரபரப்பு

பெ.நா.பாளையம், பிப்.19: கோவை அருகே பாதி தீயில் எரிந்த நிலையில் காட்டுப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வட்டமலைபாளையத்தில் இருந்து இடிகரை செல்லும் சாலையில் காட்டுப்பகுதி உள்ளது. நேற்று மாலை 3 மணி அளவில் அந்த பகுதிக்கு சென்றவர்கள் பெண்ணின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 25 வயது மதிக்கத்தக்க பெண் என்றும் சிவப்பு கலர் சுடிதார் அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் துறையினர் வந்து ஆதாரங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. காட்டுப்பகுதியை சுற்றி வந்து மெயின் ரோடு வரை சென்று மோப்ப நாய் நின்று விட்டது. பெண்ணை தீயில் எரித்து கொலை செய்தவர்கள் வேறு பகுதியில் இருந்து இங்கே கொண்டு வந்து போட்டார்களா? சம்பவத்தின் பின்னணி என்ன ? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: