கோவை, பிப்.27: கோவை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு உள்நாட்டு நகரங்கள் மற்றும் வெளிநாட்டு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்கள் விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை விமான நிலைய வளாகத்தில் புறப்பாடு பகுதிக்கு அருகில் உள்ள இருக்கையில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது.
இதனை கவனித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த பையினை மோப்ப நாய் உதவியுடன் சோதனைக்கு உட்படுத்தினர். அதில் பிரச்னைக்குரிய எந்த ஒரு பொருளும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பையினை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எடுத்துச் சென்றனர்.
