திருப்பூர், பிப்.21: திருப்பூர், கே.எஸ்.சி. பள்ளி பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (45). இவர் பழைய பஸ் நிலையம் குள்ளிச்செட்டியார் வீதியில் பெட்டிக்கடை வைத்து அதில் பனியன், ஜட்டி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றார். தொடர்ந்து நள்ளிரவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. உள்ளே இருந்த துணிகளில் தீ பற்றி மளமளவென எரியத்தொடங்கியது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் கடையில் இருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலானது. மின் கசிவு தான் தீ விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
