மதுரை: சட்டம் பயின்றவர்களை கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கக் கோரிய வழக்கில் கல்லூரி கல்வி இயக்குநர் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பிகாம், பிபிஏ பயில்வோருக்கு அது தொடர்பான சட்டப்படிப்பும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்கள் அல்லது பகுதி நேர விரிவுரையாளர்கள் சட்டப்படிப்பை கற்பித்து வருகின்றனர்.
சில கல்லூரிகளில் சட்டப்படிப்பில் பட்டம் பெறாதவர்கள், சட்டக் கல்வியை பயிற்றுவிக்கும் நிலை உள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிகாம், பிபிஏ துறை மாணவர்களுக்கு சட்டம் பயின்றவர்கள் மட்டுமே கவுரவ விரிவுரையாளர் மற்றும் பகுதிநேர பேராசிரியர்களாக பணியாற்றுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், பிகாம் மற்றும் பிபிஏ படிக்கும் மாணவர்களுக்கு சட்டப்படிப்பு என்பது துணைப்பாடமே. இதை எம்காம் படித்தவர்கள் கூட கற்பிக்கலாம். அரசு எல்லா மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரியை திறந்து விட்டது. ஆனால், நல்ல ஆசிரியர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது என்றனர். பின்னர் மனுவிற்கு தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.
