தமிழகத்திற்கு முத்ரா திட்டத்தில் ரூ.3.6 லட்சம் கோடி கடன் சென்னை-ஐதராபாத் புல்லட் ரயில் கட்டுமானம் விரைவில் தொடங்கும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: தமிழகத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3.6 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சென்னையலிருந்து ஐதராபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் ஒன்றிய அரசின் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த 2 நாள் சேவை முகாம் சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று நடந்தது.

விழாவில் கலந்துகொண்ட ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், உஜ்வாலா இலவச எரிவாயு இணைப்பு, கிசான் கடன் அட்டை, லட்சாதிபதி சகோதரி திட்டத்தின் கீழ் மகளிருக்கு நிதியுதவி, முத்ரா திட்டத்தின் கீழ் கடன் உதவி, ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் இந்தியா கடந்த 12 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது.

உலகிலேயே வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. நாட்டில் அடிப்படை உள்கட்டமைப்பு, ஏழைகளின் மேம்பாடு ஆகியவற்றைத் தம் இரு கண்களாக எண்ணி 2047க்குள் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் மோடி நாட்டை வழிநடத்தி வருகிறார்.  தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு புல்லட் ரயில் கட்டுமானம் தொடங்கும். மேலும், தமிழ்நாட்டில் ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.2 கோடி பேரும், சுரக்க்ஷா பீமா விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2.8 கோடி பேரும் பயனடைந்துள்ளனர். முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3.6 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. அடல் பென்சன் திட்டத்தின் கீழ் 55 லட்சம் பேரும், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டத்தின் கீழ் 6.2 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 22 லட்சம் விவசாயிகளுக்கு விவசாயி கவுரவிப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.  இதில், மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் வி.பழனிச்சாமி, மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநர் ஜெ.காமராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: