சென்னை: துணை குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்து கார்ப்பரேட் கம்பெனிகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சட்ட வரைவுகளை முன்னெடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் மண்ணின் மைந்தரான குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருந்தந்தை வாழ்த்து செய்தியாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவரின் பதவி ஏற்பின்போது வெளியிட்டிருந்தது. அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிடவும், அகில இந்திய அளவில் நிலவிவரும் இறுக்கமான சிறு, குறு அடித்தட்டு வணிகர்களின் வாழ்வாதார நெருக்கடிகளை தீர்த்திடவும், கார்ப்பரேட் கம்பெனிகளின் வணிக ஆதிக்கங்களினால் தற்போது நிலவிவரும் பாரம்பரிய சங்கலித்தொடர் வணிகம் பாதிக்கப்படுவதை தவிர்த்திட கார்ப்பரேட் கம்பெனிகளை ஒழுங்குமுறை படுத்துவதற்கான சட்ட வரைவுகளை முன்னெடுத்திடவும், துணை குடியரசு தலைவரை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தேன். இந்ந சந்திப்பின் போது பேரமைப்பு தலைமை செயலாளர் ராஜ்குமார் உடனிருந்தார். கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்து, உரிய தீர்வுகளை காண்பதற்கான வழிமுறைகளை முன்னெடுப்பதாக குடியரசு துணை தலைவர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
