நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா வளைவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவரை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் சாலை மார்க்கமாகப், மதியம் கன்னியாகுமரிக்கு வந்தார்.
கன்னியாகுமரி சீரோபாயின்ட் பகுதியில் திமுகவினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் வரவேற்பை பெற்றுக்கொண்டு கன்னியாகுமரியில் ரூ.1.45 கோடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு வளைவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு வளைவு காண்போரை கவரும் வகையில் நான்கு பக்கமும் திருவள்ளுவர் உருவச் சிலை செதுக்கப்பட்டு இருக்கிறது.
அலங்கார வளைவு வாயிலை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட பின்னர் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெருமாள்புரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சென்றார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 90 குடியிருப்புகளை, முகாம் வாழ் தமிழர்களையே திறந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி முகாம் வாழ் தமிழர்களால் குடியிருப்பு திறந்து வைக்கப்பட்டது.
பின்னர், அவ்வீடுகளை பார்வையிட்டு, முகாம் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். அவர்கள் விரும்பி கொடுத்த இளநீரை வாங்கி பருகினார். பின்னர் அங்கிருந்த குழந்தையுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து, மாலையில் புத்தளம் அருகே கல்லடிவிளையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நேற்று இரவு நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பொன்னப்பநாடார் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்று காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று, குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
