சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்பை, இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்த உத்தரவை எதிர்த்து கடந்த 2013ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பை இந்தியாவில் தடை செய்ததை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, 13 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுதிர்குமார் அமர்வில் நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, தடை உத்தரவை உறுதி செய்வதற்கான தீர்ப்பாய விசாரணையில் தன்னை ஒரு வாதியாக சேர்க்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து விட்டதால் மனுதாரர் இந்த வழக்கை தொடர முடியாது. விசாரணை நடைமுறைகள் அனைத்தும் டெல்லியில் நடந்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. புலிகள் அமைப்பின் அச்சுறுத்தல் நீடிப்பதாக கருதிய ஒன்றிய அரசு 2014ம் ஆண்டுக்கு பின்னர் 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் தடை குறித்து புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகளை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை. ஏற்கனவே காலாவதியான 2012ம் ஆண்டைய உத்தரவை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார்.
மனுதாரரான வைகோ ஆஜராகி, இந்தியாவுடன் தமிழீழத்தை இணைக்க முயற்சித்ததாக குற்றம் சாட்ட எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் தடை சட்டவிரோதமானது. தடையை நீக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். தடை விதித்து புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், பழைய உத்தரவுகளில் என்ன சொல்லப்பட்டதோ அதே தான் அடுத்தடுத்த உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளன என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தற்போது 2024 அறிவிப்பு தான் அமலில் உள்ளது. காலாவதியான உத்தரவின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
