சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட – பழங்குடியின மக்கள் இந்திய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிட -பழங்குடியின இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காக அளித்து வரும் உதவிகளுடன் கூடிய ஊக்கங்களால் 2025ம் ஆண்டில் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 82 சதவீதம் என்பது 91.85 சதவீதமாகவும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.55 சதவீதம் என்பது 95.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
அதேபோல், 2024-25ம் கல்வியாண்டில் IIT, NIT, NIFT மற்றும் FDDI போன்ற தேசியக்கல்வி நிறுவனங்களில் 16 பட்டியல் இன மாணவர்கள் இடம்பிடித்தனர். 2025-26ம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 135 மாணவர்கள் என உயர்ந்து மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. ஆதிதிராவிடர்-பழங்குடியினர் பள்ளிகளில் ரூ.456.83 கோடி நிதி ஒதுக்கீட்டில் 868 வகுப்பறைகள் கட்டப்பட்டு; பாதுகாப்பான சுற்றுச்சுவர்கள், நவீன கழிப்பறைகள், சுகாதாரமான சமையலறைகள் உள்ளிட்ட 417 கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம்வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.6,604.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில் 10 ஆண்டுகளில் 6 மாணவர் பயன்; திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் 440 மாணவர் பயன். அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சம் என்பது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டு; ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் உதவிபெற்று முந்தைய ஆட்சியில் 10 ஆண்டுகளில் 6 மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளில் பயின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் ரூ.75.54 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டு 440 மாணவர்கள் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் அருமையான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
இதுமட்டுமின்றி, முனைவர் பட்ட ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், ஆதிதிராவிட பழங்குடியினங்களை சேர்ந்த 8,886 ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.88.86 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் பட்டயப் படிப்பு உதவித்தொகை 184 பழங்குடியின மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.70,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், ‘என் கல்லூரிக் கனவு’ திட்டத்தில் 2.52 கோடி செலவில் 59 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளின் மாணவர்களுக்கு உயர்கல்வித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு 111 மாணவர்களும், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைச் சேர்ந்தப் 26 மாணவர்களும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஐஐடி, என்.ஐ.டி தேசிய சட்டக் கல்லூரி முதலான தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கைபெற்றுப் பயில்கின்றனர்.
ரூ.1,143 கோடி நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய 77 புதிய விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. 113.45 கோடியில் 663 பழைய விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52,255 ஆதிதிராவிட அழங்குடியின மக்களுக்கு ரூ.409.68 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டு தொழில் முகவர்களாக மேம்படுத்தப்பட்டுள்ளனர். விரிவான வாழ்வாதார மேம்பாட்டு திறன் பயிற்சிகள் திட்டத்தின்கீழ் 10,740 பழங்குடியின பயனாளிகளுக்கு ரூ.254.31 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023ம் ஆண்டில் புத்தாக்க தொழில் கொள்கையை வெளியிட்டு அளித்து வரும் ஊக்கம் காரணமாக இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் வாழும் ஆதிதிராவிட பழங்குடியினரில் 43 பேர் தொழில் முனைவர்களாக உயர்ந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.60.80 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிரை நில உடமையாளர்களாக உயர்த்தும் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.49.35 கோடி மானியம் வழங்கப்பட்டு 1,042 மகளிர் நில உடைமையாளராக மாற்றப்பட்டனர்.
வீடற்ற ஆதிதிராவிடர்/பழங்குடியினமக்களுக்கு மொத்தம் 3,09,707 இலவச வீட்டுமனை இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், 8,535 உட்கட்டமைப்புப் பணிகள் ரூ.910 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ.117.27 கோடியில் 120 கிராம அறிவு மையங்களும், ரூ.40 கோடியில் 52 அறிவுச் சுடர் மையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தொல்குடி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பழங்குடியினர் வாழும் குடியிருப்பு பகுதிகளில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் ரூ.1,000 கோடி செலவில் குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள், சாலைகள், குடிநீர், தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் ரூ.158.46 கோடிமதிப்பீட்டில் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் சட்ட உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 5,374 பணிகள், செயல்படுத்தப்பட்டுள்ளன. அழிவின் விளிம்பிலுள்ள வீடுகளற்ற பண்டைய பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமூகங்களுக்கு ரூ.315.44 கோடி செலவில் 7,255 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் ரூ.32.6 கோடி செலவில் 28 சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டு; பண்டைய பழங்குடியினருக்கு ரூ.10.33 கோடியில் 60 பல்நோக்கு மையங்களும், பழங்குடியினர் குடியிருப்புகளில் ரூ.5.75 கோடியில் 23 சமுதாயக் கூடங்களும் கட்டப்படுகின்றன.
பழங்குடியின மாணவர்கள் கற்பதற்கு தேவையான சூழலை உருவாக்கும் வகையில் 117.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 120 கிராம அறிவுசார் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் ரூ.125.37 கோடி மதிப்பீட்டில் 126 அறிவு மையங்கள் கட்டப்படுகின்றன. அனைத்து வகையிலும் ஆதிதிராவிட பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்தி வரும் திட்டங்களால் இந்திய அளவில் தமிழ்நாட்டின் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் சிறப்பான முறையில் முன்னேற்றம் கண்டு வாழ்க்கையில் உயர்ந்து வருகின்றனர்.
