தேக்கு மரம் விவகாரம், காவலர்கள் நிதி கையாடல் எஸ்பி ஆசிஷ் ராவத் மீதான வழக்கிற்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தஞ்சாவூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், தஞ்சாவூர் எஸ்பியாக கடந்த 2023 முதல் 2025 வரை ஆசிஷ் ராவத் பணியாற்றினார். அப்போது காவலர் குடியிருப்பில் உள்ள தேக்கு மரங்களை வெட்டி சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியுள்ளார். காவலர்கள் நலன் சங்க பொது நிதியை எடுத்து கையாடல் செய்துள்ளார். காவலர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் கட்ட முறையான டெண்டர் விடாமல் முறைகேடுகள் செய்துள்ளார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தஞ்சை நீதிமன்றம், ஆசிஷ் ராவத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தது. தஞ்சை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஆசிஷ் ராவத் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா ஆஜராகி, ‘‘நீதி பரிபாலனத்தின் அடிப்படை நடைமுறைகளை பின்பற்றாமல், மாவட்ட நீதிபதி அவசர அவசரமாக உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடமோ அல்லது குற்றச்சாட்டுக்குள்ளான ஐபிஎஸ் அதிகாரியிடமோ எவ்வித விளக்கமும் கேட்காமல், நேரடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது சட்டத்திற்கு முரணானதாகும்.

அரசு ஊழியர்கள் தங்களது அலுவல் கடமைகளை மேற்கொள்ளும்போது, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தால், அவர்களை தேவையற்ற வழக்குகளில் இழுத்தடிக்கக் கூடாது என்பதற்காகவே, முன் அனுமதி பெற்று மட்டுமே வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சட்டம் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில், எந்தவித முன் அனுமதியும் பெறாமல் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது சட்டப்படி தவறானதாகும். மனு தாக்கலான அதே நாளில் ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது முறையற்றது.

இத்தகைய வழக்குகளில் மாவட்ட நீதிமன்றம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக, உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல தீர்ப்புகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. குறிப்பாக, விசாரணை நீதிமன்றத்திற்கு இவ்வாறு நேரடியாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த புகாரை அளித்த வழக்கறிஞர் மீதே குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவற்றை கருத்தில் கொள்ளாமல் முறையான ஆய்வின்றி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். எனவே, ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஐபிஎஸ் அதிகாரியின் குடியிருப்பு வீட்டை ஆய்வு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கும் தடை விதிக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Stories: