44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே கூடுதலாக 49 ரயில்கள் ரத்து: 115 ரயில்கள் மட்டும் இயங்குவதால் பயணிகள் அவதி

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ஏற்கனவே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக 49 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 115 ரயில்கள் மட்டுமே இயங்குவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் கடந்த 20ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தாம்பரத்திலிருந்து, சென்னை கடற்கரைக்கு செல்லும் வழித்தடங்கள் மற்றும் செங்கல்பட்டு நோக்கி செல்லும் வழித்தடங்களில் 208 மின்சார ரயில்கள் இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்ட நிலையில், 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இரு மார்க்கத்திலும் 164 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் சென்னை புறநகர் பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவசர தேவைக்காக செல்பவர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு இடையே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அலுவலக நாட்கள் மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக அளவிலான கூட்டம் காணப்படுகிறது. ரயில்கள் ரத்தால் பல்வேறு ரயில் நிலையங்களிலும், ரயில்கள் காலதாமதமாக வந்து செல்கின்றது, இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை முதல் மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் வழித்தடங்கள் மற்றும் செங்கல்பட்டு நோக்கி செல்லும் வழித்தடங்களில் தற்போது 115 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 208 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தபோதே ரயில்களில் இடமில்லாமல் அதிகளவில் பயணிகள் கூட்டம் இருப்பது வழக்கம்.

தற்போது இந்த வழித்தடங்களில் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நேற்று காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்களுக்காக கூட்டம், கூட்டமாக பயணிகள் காத்துக் கிடந்தனர். நடைமேடைக்கு ரயில் வந்து நின்றவுடன் பயணிகள் முண்டியடித்து ஏறியதால் பலரும் நெரிசலில் சிக்கித் தவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ரயில்களில் இடமில்லாமல் பெரும்பாலானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்தனர்.

ஏற்கனவே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என கருதி தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. தற்போது மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு சார்பில் மேலும் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், 49 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதை அறியாமல் பெரும்பாலான பயணிகள் ரயில் நிலையத்தில் பலமணிநேரம் காத்துக்கிடந்தனர். பின்னர், ஏமாற்றமடைந்த பயணிகள் பேருந்துகளில் பயணித்தனர். இதனால், தாம்பரம் பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் மிகுந்து பரபரப்புடன் காணப்பட்டது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளித் தேர்வுகள் நடைபெறும் நிலையில் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோடை விடுமுறை நாட்களில் இந்த பராமரிப்பு பணிகளை செய்திருந்தால் பயணிகளின் பாதிப்புகள் குறைவாக இருந்திருக்கும். எந்த ஒரு திட்டமிடல் இல்லாமல் மின்சார ரயில்களை பெருமளவு ரத்து செய்யப்பட்டு இருப்பது அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வருகிறது.

ரயில்கள் ரத்தால் பேருந்துகள் மூலம் செல்லலாம் என்பதற்காக தாம்பரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றால் வழக்கம் போல அங்கு இருக்கும் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை. இதனால் பெண்கள், முதியவர்கள் பரிதவிக்கின்றனர். எனவே, தாம்பரம் பகுதியில் தொடர்ந்து பழுதாகி உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் எஸ்கலேட்டர்களை முறையாக பராமரிக்க வேண்டும், பயணிகள் வசதிக்கென கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: