சென்னை: விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரின் வருமான உயர்வுக்கான ஆலோசனை வழங்க தமிழக அரசு புதிய ஏற்பாடு செய்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தல் துறையில் முதலீடுகளை ஊக்குவிப்பதும், வேளாண் விளைபொருட்கள் மற்றும் அவை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் TNAPEx-ன் முக்கிய நோக்கங்களாகும். அறுவடை பின் ஏற்படும் வேளாண் விளைபொருள் சேதத்தை குறைப்பது, உணவு பதப்படுத்தல் மற்றும் மதிப்பு கூட்டும் தொழில் கூடங்களை ஊக்குவிப்பது, வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவது போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த பின்னணியில், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் தங்களின் சந்தேகங்களுக்கு நேரடியாக தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மற்றும் அரசு நிறுவன நிபுணர்களிடம் இருந்து விளக்கம் பெறும் வகையில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘வாரந்தோறும் வர்த்தக ஆலோசனை’ என்ற தொடர்ச்சியான ஆன்லைன் ஆலோசனை நிகழ்ச்சியை TNAPEx தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம், விவசாய விளைபொருட்களை நல்ல விலையில் விற்பது எப்படி, பதப்படுத்தல் மூலம் வருமானத்தை எவ்வாறு அதிகரிக்கலாம், அரசு அனுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் எவை, அரசு மானியங்கள் மற்றும் உதவி திட்டங்களை எவ்வாறு பெறலாம், வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தலாம் போன்ற முக்கிய அம்சங்களுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
வாரந்தோறும் நடைபெறும் மக்கள் ஆலோசனை நிகழ்ச்சியில், விவசாயிகள், உணவு பதப்படுத்தல் தொழில் முனைவோர், எம்எஸ்எம்இ மற்றும் ஸ்டார்-அப் நிறுவனங்கள், எப்பிஓ உறுப்பினர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம். இந்த ஆலோசனையின் மூலம், விவசாய விளைபொருட்களை நல்ல விலையில் விற்கும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, இடைத்தரகர்கள் மீது உள்ள சார்பு குறையும்; பதப்படுத்தலின் மூலம் கூடுதல் வருமானம் உருவாகும்; விளைபொருட்கள் வீணாகும் நிலை குறையும்; மேலும் அரசு அனுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் குறித்த தெளிவு கிடைக்கும். இந்த கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 11 மணி முதல் 12.30 வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9500261727, 9500261827 என்ற தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
