ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார், பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் 7 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானிய நில பகுதி பயன்படுத்தப்படுகிறது எனவும், இதனை நிறுத்தும்படியும் பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது.

சமீபத்தில் இஸ்லாமாபாத் நகரில் நடந்த தாக்குதல்களுக்கு அந்நாடான ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. ஆனால், இதனை ஆப்கானிஸ்தான் மறுத்தது. இதுபோன்று பொதுமக்கள் பலியாக கூடிய தாக்குதல்களை நாங்கள் நடத்தமாட்டோம் என கூறியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் மீது விமான படையை கொண்டு பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் பெர்மால் மற்றும் ஆர்குன் மாவட்டங்களின் மீது பாகிஸ்தான் விமானங்கள், வான்வழியே தாக்குதல் நடத்தின.

பக்திகா மாகாணத்தில் மதகுருமார்களுக்கான கல்வி நிலையம் மீதும் தாக்குதல் நடந்தது. இதேபோன்று நங்கர்ஹார் மாகாணத்தில் கோகியானி பாசோத் மற்றும் கானி கேல் மாவட்டங்களின் மீதும் பாகிஸ்தானிய ஜெட் விமானங்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தின. இந்த நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எனினும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் தலால் சவுத்ரி கூறும்போது 70 பயங்கரவாதிகள் தாக்குதலின்போது கொல்லப்பட்டனர் என கூறினார்.

இந்த தாக்குதலை ஆப்கானிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித்தும் உறுதி செய்துள்ளார். அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்தனர். நிறைய பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார். இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானங்களும், ஜே.எப்.-17 தண்டர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதனை பாகிஸ்தான் உறுதிப்படுத்தி உள்ளது.

Related Stories: