வாஷிங்டன்: ஈரான் நாட்டின் முக்கிய எண்ணெய் வர்த்தக மையங்களை கைப்பற்ற அமெரிக்க ராணுவம் தீவிரமான தரைவழி தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகிறது. மத்திய கிழக்கு பகுதியில் கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு, தற்போதுதான் மிகப்பரிய அளவில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 28ம் தேதியன்று வளைகுடா பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கின. தொடர்ந்து, ஈரானின் முக்கிய நீண்டகால திட்டமிட்ட இலக்குகளை குறிவைத்து தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா தற்போது தயாராகி வருகிறது.
குறிப்பாக, ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கையாளும் கார்க் தீவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பென்டகன் திட்டமிட்டுள்ளது. கடந்த 13ம் தேதியன்று இந்த தீவில் உள்ள ராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்கா துல்லியமான தாக்குதலை நடத்தியது. தற்போது அந்த தீவை முற்றுகையிடவோ அல்லது நேரடியாகக் கைப்பற்றவோ அந்நாட்டு பாதுகாப்புத் துறை ஆலோசித்து வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தளங்களை அழிக்க, கடற்கரை ஓரங்களில் அதிரடி சோதனைகளை நடத்த சிறப்புப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த போருக்காக சுமார் 7,000 கூடுதல் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். யுஎஸ்எஸ் திரிப்போலி மற்றும் யுஎஸ்எஸ் பாக்சர் ஆகிய போர்க்கப்பல்களில் மெரின் எக்ஸ்பெடிஷனரி யூனிட் வீரர்கள் இப்பகுதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மேலும், 82வது ஏர்போர்ன் டிவிஷனைச் சேர்ந்த 2,000 வீரர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் நாட்டுக்கு ஏப்ரல் 6ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருப்பதால், அடுத்த 10 நாட்களுக்கு எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
தற்போது நிலவி வரும் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 126 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் சவுதி அரேபியா, குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் தங்களது எண்ணெய் ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 62 சதவீத மக்கள் முழு அளவிலான தரைவழிப் போருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்காரணமாகவே, நீண்ட கால ஆக்கிரமிப்புக்குப் பதிலாக, சில வாரங்கள் மட்டுமே நீடிக்கக்கூடிய குறிப்பிட்ட தரைவழித் தாக்குதல்களை நடத்த பென்டகன் முடிவு செய்துள்ளது. அதேசமயம், கார்க் தீவைக் கைப்பற்றுவது ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் என்றாலும், அங்குள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஆபத்து ஏற்படும் என்றும் ராணுவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
எங்கெங்கு அமெரிக்க படை உள்ளது?
அமெரிக்கா தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிகப்பெரிய கடற்படை வலிமையை ஈரான் நாட்டுக்கு எதிராக நிலைநிறுத்தியுள்ளது. ஓமன் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ கப்பலில் இருந்து ஈரானிய இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்’ என்ற மூன்றாவது விமானம் தாங்கி கப்பலும் இப்பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. விமானப்படை தளங்களை பொறுத்தவரை, இஸ்ரேலில் உள்ள ஓவ்டா விமானப்படைத் தளத்தில் முதன்முறையாக அமெரிக்கா தனது ‘எப்-22’ ரக அதிநவீன போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் தளத்தில் கண்காணிப்பு விமானங்களும், கத்தாரில் உள்ள அல் உதைட் தளத்தில் குண்டுவீச்சு விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. ஈரானின் பதில் தாக்குதலால் கத்தார் தளம் சேதமடைந்துள்ள போதிலும், அங்கிருந்து தொடர்ந்து டிரோன்கள் இயக்கப்படுகின்றன. இந்த போர் சூழல் குறித்து அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஈரான் நாட்டின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து எங்களது போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தரைப்படை ஊடுருவலை தவிர்க்க முயன்றாலும், சுமார் 50,000 வீரர்களை எந்நேரமும் போருக்கு தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளோம்’ என்று கூறினார்.
