மேற்கு ஆசியா போரில் ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி படையும் களமிறங்கியது: இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவி தாக்குதல்; செங்கடல் வழித்தடம் மூடப்படும் அபாயம்

துபாய்: மேற்கு ஆசியா போரில் ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப் படையும் களமிறங்கி உள்ளது. இஸ்ரேல் மீது ஹவுதி படையினர் முதல் முறையாக ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஏற்கனவே இப்போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஹவுதியின் வரவால் செங்கடல் வழித்தடத்தில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்து வருகிறது.

இப்போரில், ஈரானுக்கு ஆதரவாக உள்ள லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்தும் இஸ்ரேல் சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற மற்றொரு கிளர்ச்சிப் படையான ஏமனின் ஹவுதி அமைப்பும் போரில் களமிறங்கி உள்ளது. ஈரானும் ஹிஸ்புல்லாவும் இரவு முழுவதும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று காலை ஏமனில் இருந்து ஹவுதி படை இஸ்ரேல் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகளை ஏவியது. இவை இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஹவுதிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சரீ, அல் மசிரா செயற்கைகோள் தொலைக்காட்சியில் பேசுகையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள முக்கிய இஸ்ரேலிய ராணுவ தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக உறுதிபடுத்தினார். ஹவுதி படையினர் கடந்த 2014 முதல் ஏமன் தலைநகர் சனாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சவுதி அரேபியாவுடன் மேற்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மேற்கு ஆசியா போரில் இருந்து இதுவரை விலகி இருந்த ஹவுதி படையும் தற்போது இணைந்திருப்பது போரை விரிவுபடுத்தி உள்ளது.

காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு கப்பல் போக்குவரத்து சீர்குலைந்தது. இவ்வழியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் விநியோகம் நடந்து வருகிறது. நவம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை, ஹவுதிகள் செங்கடல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வர்த்தக கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கி, 2 கப்பல்களை மூழ்கடித்து, 4 மாலுமிகளைக் கொன்றனர்.

மேலும் உலக பொருளாதாரத்தின் மற்றொரு முக்கிய கடல் வழிப்பாதையான சூயஸ் கால்வாயும் செங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. ஏற்கனவே இப்போரால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் செங்கடல் பகுதியில் ஹவுதி படை, வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ சூயஸ் கால்வாயை மூடுவதற்கான முயற்சிகளை எடுத்தாலோ அது உலக பொருளாதாரத்தின் நிலைமையை இன்னும் கவலைக்கிடமாக்கி விடும். இது உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

இதுதவிர, இஸ்ரேல் மீது தற்போது ஈரானும், ஹிஸ்புல்லாவும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இனி ஹவுதியும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தும். ஏற்கனவே இஸ்ரேலின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி, ஈரான் ஏவுகணைகள் இலக்குகளை தாக்கி வருகின்றன. இந்த நிலையில் ஹவுதியும் சேரும் பட்சத்தில் இஸ்ரேலுக்கு அது மிகப்பெரிய சிக்கலையும் ஏற்படுத்தும். ஆகவே மேற்கு ஆசியா போரில் ஹவுதி படை இணைந்திருப்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

* சவுதியில் அமெரிக்க விமானங்கள் சேதம் 15 வீரர்கள் காயம்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த விமானப்படை தளத்தை அமெரிக்க ராணுவமும் பயன்படுத்தி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 15 பேர் காயமடைந்ததாகவும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அங்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த அமெரிக்க போர் விமானங்களும் சேதமடைந்த செயற்கைகோள் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

* டிரம்பின் முயற்சி பலிக்காது: ஜெர்மனி
ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் பிராங்க்பர்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பதற்றத்தை தணிக்கும் வகையிலோ அல்லது அமைதியான தீர்வை எட்டும் முயற்சியாகவோ இல்லை. மாறாக, பெரும் பதற்ற அதிகரிப்பாகவே அவரது நடவடிக்கைகள் உள்ளன. இது நம் அனைவருக்குமே அச்சுறுத்தலாக அமைகிறது. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அவர்களின் உண்மையான இலக்காக இருக்குமானால், அதை அவர்கள் அடைவார்கள் என நான் கருதவில்லை. கடந்த காலங்களில் இத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன’’ என்றார்.

* இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் கண்டனம்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது மேற்கு ஆசியா போர் குறித்து பேசிய ஷெரீப், ஈரான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை கடுமையாக கண்டித்தார். இப்போரால் ஈரானில் பலியான 1,900 பேருக்கும் இரங்கல் தெரிவிப்பதாக கூறி உள்ளார். மேலும் இப்போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொள்ளும் ராஜதந்திர முயற்சிகள் குறித்து பிரதமர் ஷெரீப் ஈரான் அதிபரிடம் விளக்கினார்.

* சவுதி, எகிப்து, துருக்கி அமைச்சர்கள் பாக். பயணம்
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்கிறது. இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டுள்ளது. இன்றும், நாளையும் அவர்கள் 2 நாள் ஆலோசனை நடத்த உளள்ளனர்.

* 5 இந்தியர்கள் காயம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள கலிபா பொருளாதார மண்டலப் பகுதியில் இடைமறிக்கப்பட்ட ஈரான் ஏவுகணையின் எஞ்சிய பாகங்கள் விழுந்ததில் 5 இந்தியர்கள் காயமடைந்தனர்.

Related Stories: