வாஷிங்டன்: மேற்காசிய போர் நிலவரம் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் தொழிலதிபர் எலன் மஸ்க்கும் கலந்து கொண்டதாக வௌியான தகவலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மேற்காசிய போர் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை கடந்த 24ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போர் நிலவரம், பாதிப்புகள் மற்றும் அமைதியை மீட்டெடுப்பது பற்றி இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிலதிபர் எலன் மஸ்க்கும் பங்கேற்றதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.
மேற்காசிய போர் தொடர்பாக எலன் மஸ்க் என்ன பேசினார்? போர் நிறுத்தம் பற்றி இருநாட்டு தலைவர்களுக்கும் ஏதேனும் ஆலோசனை வழங்கினாரா? இருநாட்டு தலைவர்களின் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் 3ம் நபர் பங்கேற்றது ஏன்? என்ற கேள்விகள் எழுந்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன. அதிபர் டிரம்பின் இரண்டாவது அரசாங்கத்தில் நிர்வாக சீர்திருத்த தலைவராக நியமிக்கப்பட்ட எலன் மஸ்க், பின்பு டிரம்புடன் ஏற்பட்ட கருத்து மோதல்களால் அந்த பதவியில் இருந்து விலகினார். இதனால் டிரம்புக்கும், மஸ்க்குக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், டிரம்பும், எலன் மஸ்க்கும் நல்ல உறவில் நீடிப்பதை இதுகாட்டுவதாகவும் நியூயார்க் டைம்ஸ் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வௌியுறவு செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “நியூயார்க் டைம்ஸ் செய்தியை நாங்கள் பார்த்தோம். கடந்த 24ம் தேதி செவ்வாய்கிழமை நடந்த தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொழிலதிபர் எலன் மஸ்க்கும் பங்கேற்றதாக நியூயார்க் டைம்ஸ் வௌியிட்ட செய்தி குறித்து நாங்கள் பார்த்தோம். இதில் உண்மையில்லை. பிரதமர் மோடிக்கும், அதிபர் டிரம்ப்புக்கும் இடையேதான் உரையாடல் நடந்தது. இது மேற்காசியாவின் நிலைமை குறித்த தகவல்கள் பரிமாறி கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
