இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான போரில் இணைந்ததாக ஏமனின் ஹூத்தி அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடியும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ள ஹூத்திகள், ஈரான், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹூத்தி அமைப்பு இஸ்ரேல் மீது முதன்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை (Ballistic Missile) ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.
பிப்ரவரி 28, 2026 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் தொடங்கியது. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள ஏவுகணை உற்பத்தி மையங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ஈரானின் கூற்றுப்படி, இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 32 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடியதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இன்னும் 2 முதல் 4 வாரங்களில் போர் முடிவுக்கு வரலாம் எனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் இதில் மத்தியஸ்தம் செய்ய முயன்று வருகிறது.
இந்த நிலையில், ஏமனின் ஹூத்தி அமைப்பு போரில் இணைந்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
