போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: கார்க், ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற திட்டம்; பதிலடிக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவிப்பு

துபாய்: மேற்கு ஆசியாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அமெரிக்கா ஈரானில் தரைவழி தாக்குதல் நடத்த ரகசியமாக திட்டமிட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதற்கும் பதிலடி தர ஈரான் படைகளும் தயாராக இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப் கூறி உள்ளார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள மேற்கு ஆசியா போர் நேற்று 30வது நாளை எட்டியது.

இப்போரால் உலக அளவில் கடுமையான பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறது. பாகிஸ்தான் தலைமையில் சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து நாடுகளும் இணைந்து இரு தரப்பிலும் மத்தியஸ்தம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில், பேச்சுவார்த்தை நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஈரானில் ரகசியமாக நுழைந்து தரை வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் நேற்று வெளியாகின.

ஈரானின் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், ‘‘அமெரிக்கா வெளிப்படையாக பேச்சுவார்த்தைக்கான செய்தியை அனுப்பி விட்டு, ரகசியமாக தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கு பதிலடி நாங்களும் தயாராக இருக்கிறோம். அமெரிக்க வீரர்கள் வந்தால் அவர்களை தீயிட்டு கொளுத்துவதற்காக எங்கள் வீரர்கள் காத்திருக்கிறார்கள். எங்கள் தாக்குதல்கள் தொடர்கின்றன.

எங்கள் ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. எங்கள் உறுதியும் நம்பிக்கையும் பன்மடங்கு பெருகியுள்ளன. அமெரிக்கா சமர்பித்த 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தம் அவர்களின் சுய விருப்பங்கள். ராணுவ பலத்தைப் பயன்படுத்தி எதைச் சாதிக்க டிரம்ப் நிர்வாகம் தவறியதோ, அதையே இந்த 15 அம்ச திட்டத்தின் மூலம் அடைய அவர்கள் முயல்கின்றனர். ஈரானின் சரணாகதியை அவர்கள் எதிர்பார்க்கும் வரையில், எங்கள் பதில் மிகத் தெளிவானது. அவமானத்தை ஏற்றுக்கொள்வது எங்கள் இயல்புக்கு முற்றிலும் அப்பாற்பட்டது’’ என்றார்.

முன்னதாக, ஈரானில் பலவார கால தரைவழி தாக்குதலுக்கு பென்டகன் தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ராணுவத்தின் 3,500 வீரர்கள் கொண்ட படை மத்திய கிழக்கை சென்றடைந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஈரானில் குறிப்பிட்ட சில இலக்குகளை அமெரிக்கா குறிவைத்துள்ளது. ஈரானில் இருந்து 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் கார்க் தீவையும், எண்ணெய், எரிவாயு விநியோகத்தின் முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரானிடம் இருந்து கைப்பற்றுவது அமெரிக்காவின் முக்கிய இலக்கு என கூறப்படுகிறது. இதை நோக்கி அமெரிக்கா படைகளை நகர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.

கார்க் தீவு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரானின் இரும்புக்கரம் கொண்டு பாதுகாத்து வருவதால் இப்போரில் அமெரிக்காவால் அடுத்தகட்ட நோக்கி முன்னேற முடியாமல் திணறுகிறது. எனவே, இவ்விரு இலக்குகளையும் குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. ஏற்கனவே இப்போரில் ஹிஸ்புல்லா அமைப்பை தொடர்ந்து, ஏமனின் ஹவுதி படைகளும் இணைந்திருக்கிறது. நேற்றும் ஹவுதி படை இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இருக்கிறது.

எனவே ஈரான் மீது அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தும் பட்சத்தில் மேற்கு ஆசியா போர் மேலும் கொளுந்து விட்டு எரிந்து, இன, மத மற்றும் பிராந்தியப் பிளவுகளை ஆழப்படுத்தி, எதிர்கால நல்லிணக்கத்தை மிகவும் கடினமாக்குவதோடு, தற்போதைய ராணுவ மோதலுக்குப் பிறகும் நீண்ட காலம் நீடிக்கக்கூடிய நிலையற்ற தன்மையையும் உருவாக்கக்கூடும் என்று துருக்கியின் உளவுத்துறை தலைவர் காலின் எச்சரித்துள்ளார்.

* அமெரிக்கா, இஸ்ரேல் பல்கலை.களுக்கு குறி
ஈரானின் கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அனைத்து பல்கலைக்கழகங்களும் இனி தாக்குதல் இலக்காக குறிவைக்கப்படும் என ஈரானின் துணை ராணுவமான புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்களுக்கு அருகில் உள்ள மாணவர்கள், ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் குறைந்தது ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எச்சரித்துள்ளது.

முன்னதாக ஈரானின் அறிவியல் அடித்தளத்தையும் கலாச்சார பாரம்பரியத்தையும் முடக்குவதற்காக, முக்கிய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் விஞ்ஞானிகளை அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டு குறிவைப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்தது.

* பாகிஸ்தானில் 4 நாடுகள் ஆலோசனை
மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக, சவுதி அரேபியா, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாடு பாகிஸ்தானில் நேற்று தொடங்கியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணை பிரதமருமான ஐசக் தர் ஏற்பாட்டின் பேரில் இந்த 2 நாள் மாநாடு நடக்கிறது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related Stories: