நாமக்கல்லில் 2 தொகுதி கேட்டு மாஜியிடம் ஒன்றியம் அடம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 2 தொகுதிகளுக்கு பாஜக குறிவைத்து வரும் நிலையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் ஒரு மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நாமக்கல் சுற்றுலா மாளிகைக்கு சென்றார்.

அங்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகனை சந்தித்து பேசினார். இருவரும் தனியாக ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் திருச்செங்கோடு தொகுதியில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், ராசிபுரம் தொகுதியில் பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் போட்டியிட தொடர்ந்து காய்நகர்த்தி வருகின்றனர்.

அதிமுகவின் வாக்கு கணிசமாக உள்ள இந்த இரு தொகுதிகளிலும் பாஜகவின் மாநில துணைத்தலைவர்கள் குறிவைத்து கேட்பது, அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மாநில துணைத்தலைவர்கள் என்பதால் அதிமுகவிடம் இந்த தொகுதிகளை கேட்டு பாஜக மேலிடமும் குடைச்சல் கொடுத்து வருகிறது. எனவே இதற்கான முடிவை எடுக்கும் பொறுப்பை பிரதமருக்கு நெருக்கமான தங்கமணியிடம் அதிமுக ெபாதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்துள்ளார். இதன்காரணமாகவே எல்.முருகனும், தங்கமணியும் ஒரு மணி நேரம் தனியாக சந்தித்து பேசியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Related Stories: