அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: தமிழ்நாட்டில் எத்தனையோ தலைவர்கள் உள்ளார்கள். ஏன் நம் தலைவர் மீது விமர்சனம் வைக்கிறார்கள். இப்போது ஒன்றை மக்களிடமும் சமூக வலைதள வாரியர்களிடமும் பதிவு செய்கிறேன். எம்ஜிஆருக்குப் பிறகு ஒரு பிரபலமான தலைவராக வரவேண்டும் என ரஜினிகாந்த் நினைத்தார். அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என நினைத்தார்.
ஆனால், திமுக பல மிரட்டல்களைக் கொடுத்து, அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். கடைசியில் அவர் ரெட்ஜெயண்ட் தயாரிப்பில் நடிக்கச் சென்றுவிட்டார். அவர் மீது விமர்சனம் கிடையாது. ஆனால், நமது தலைவருக்கு மனவலிமை இருக்கிறது. நீங்கள் என்னைத் திட்டுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று மகளிர் தினத்தன்று மகளிருக்கான திட்டங்களை அறிவித்தார். எங்கள் தலைவர் பயந்துகொண்டு வீட்டில் உட்காரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எந்தவித தொடர்பும் இல்லாமல், திடீரென ரஜினிகாந்துடன், விஜய்யை ஒப்பிட்டுப் பேசி ரஜினிகாந்தை ஆதவ் அர்ஜுனா மட்டம்தட்டிப் பேசியுள்ளது ரஜினி ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரஜினியின் ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், ரஜினியைக் கட்சி தொடங்க பாஜ அழுத்தம் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், அந்த அழுத்தத்திற்கு பணியாமல், யோசித்து தனக்கு சரியெனப்பட்ட முடிவின்படி அரசியலுக்கு வரும் முடிவைக் கைவிட்டார் ரஜினி.
ஆனால், விஜய் கட்சி தொடங்கினாலும், பாஜவை தனது கொள்கை எதிரி என பெயரளவில் அறிவித்திருந்தாலும் இப்போதுவரை பாஜவை விமர்சிக்காமல் மென்மையான போக்கைக் கடைபிடித்துவரும் விஜய் எந்த வகையில் மனவலிமை மிகுந்தவர் என கேள்விகளை எழுப்பிச் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அதேபோல், எப்போதும் மற்றவர்கள் மீது ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைக் கூறித் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வது போலவே, இந்தமுறை ரஜினியை மட்டம்தட்டி, விஜய்யை உயர்த்திப் பேசுவதன் மூலம் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டுள்ளார் ஆர்வக்கோளாறு அரசியல்வாதி ஆதவ் அர்ஜுனா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
