700 விவசாயிகளின் இறப்புக்கு காரணமாக இருந்துவிட்டு விவசாயம் பற்றியெல்லாம் பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா? பிரதமர் மோடிக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி கண்டனம்

* எடப்பாடியையும் தமிழக விவசாய குடும்பங்கள் என்றும் மன்னிக்காது என்றும் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: விவசாயம், விவசாயிகளின் வருமானம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியெல்லாம் பேசுவதற்குப் பிரதமர் மோடிக்கு அருகதை இருக்கிறதா?. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். ஆனால், பிரதமர் மோடி என்ன செய்தார்.? விவசாயத்தையே அழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் பார்த்தார். வேளாண்மை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கடுங்குளிர், தற்கொலை, விபத்தால் 700 விவசாயிகளை கொன்றுவிட்டு, விவசாயம் பற்றியெல்லாம் பாடம் எடுக்க மோடிக்கு வெட்கமாக இல்லை? உத்தரபிரதேசம் லக்கிம்பூரில் ஊர்வலம் சென்ற விவசாயிகள் மீது பா.ஜ.வின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் காரை ஏற்றி 4 அப்பாவிகளை படுகொலை செய்தவர்கள் காருண்ணியம் பேசுகிறார்கள்.

பிரதமர் மோடி இப்படியென்றால் அவருடைய பரம அடிமையான பழனிசாமியும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததோடு சேலம்-சென்னை பசுமை வழிச் சாலையை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டு காலத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த தரவுகளை மறைத்து மோசடி ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.
இன்று திருச்சியில் நின்று விவசாயிகளுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடிதான், சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க விவசாயப் பொருட்களை இந்திய சந்தைகளில் விற்க ஒப்புதல் அளித்து, இந்திய விவசாயத்தையே சவக்குழியில் தள்ளியுள்ளார். பிரதமர் மோடியின் பொய் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது. டெல்லி டப்பா இன்ஜினால் ஒருநாளும் தமிழ்நாட்டில் நுழைய முடியாது. இங்கே திராவிட மாடல் ஆட்சியின் சூப்பர் பாஸ்ட் இன்ஜின் இருக்கிறது.
இந்த ஒற்றை இன்ஜின் மூலம் தமிழ்நாட்டை வளமாக்கியிருக்கிறோம். எங்களிடம் இரட்டை இன்ஜின் கிடைக்கும் போது இந்தியாவையே வளமாக்கி உலக நாடுகளுக்கு சவால் விடும் வல்லமையை திராவிட மாடல் அரசு எதிர்காலத்தில் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: