சொன்னாரு..! செஞ்சாரு..!! அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்

 

சொன்னாரு: கடந்த 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், அரசுப் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவை அரசே முழுமையாக ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

செஞ்சாரு: முதல்வர் அறிவித்தப்படி, இந்த திட்டத்துக்கு 2024ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ‘‘தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவ- மாணவிகளின் கல்வி செலவை ஏற்கும். மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இந்த அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’’ என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப்பெற்ற மாணவர்கள், அந்நிறுவனங்களில் சேர்வதற்காகக் கலந்து கொண்ட நுழைவுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சேர்க்கை ஆணை, ‘கல்வி’ நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்படும் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) மற்றும் அக்கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண விவரங்களுடன், அம்மாணவர்களின் சொந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் 2023-24ம் கல்வியாண்டில் ஐஐடி, என்.ஐ.டி, ஐஐஐடி, என்.ஐ.எஃப்.டி.இ.எம், ஜி.எஃப்.டி.ஐ.எஸ், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய கடற்சார் பல்கலைக்கழகம், தேசிய சட்ட பல்கலைக்கழகம், தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனம் என பல உயர்க்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

இவர்களுக்கு 2022ல் ரூ. 13.41 லட்சம் (18 மாணவர்கள்), 2023ல் ரூ.97.67 லட்சம் (74 மாணவர்கள்), 2024ல் ரூ.5.11 கோடி (333 மாணவர்கள்) என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2024-25ம் கல்வியாண்டில் ரூ.6.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: