ஈரோட்டில் தவெக தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சி அமைப்பது, தொழிலாளர் நலன் காப்பதற்கும், பெண்கள் பாதுகாப்புக்காக தவெக தலைவர் மகளிர் தினத்தன்று 10 அறிவிப்பை அறிவித்தார். தவெக தலைவர் விரல் காட்டுபவர் தான் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்.
இது கூட்டணி தொடர்பாக பரப்பப்படும் தவறான செய்திக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் கூறுகிறேன். தொலைக்காட்சி, பத்திரிகை வேண்டுமென்று பல்வேறு செய்திகளை கொடுக்கின்றனர். 3 நாட்களுக்கு முன்பு தவெக தலைவரும் பொய்யான செய்தி பரப்பி வருகின்றனர் என தெரிவித்தார். 234 தொகுதிகளிலும் தவெக தனித்தே நிற்போம். வரலாற்றை படைப்போம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
* அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த நீங்களும் திருடரா?
ஈரோடு தவெக மாவட்ட செயலாளர் பாலாஜி, 2021 வரையிலான அதிமுக ஆட்சியை பெரிய திருடர்களின் காலம் என விமர்சனம் செய்துள்ளார். அப்போது அமைச்சராக இருந்த உங்களையும் திருடர் என்கிறாரா? என நிருபர்கள் கேட்டதற்கு, செங்கோட்டையன், ‘‘பாலாஜி அப்படி சொன்னாரா? அட.. போங்கப்பா’’ என்று கூறி நிருபர்களை திட்டிவிட்டு அங்கிருந்து கோபத்துடன் சென்றார்.
