தமிழகத்தை வஞ்சித்து மல்லிப்பூ விற்பனை பற்றி கனவு காணும் மோடி: செல்வப்பெருந்தகை விளாசல்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, கடந்த 40 நாட்களில் மட்டும் 4 முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்து தமிழகத்தை கபளீகரம் செய்ய முயற்சி செய்து வருகிறார். மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து மல்லிகைப்பூ விற்பனை பற்றி கனவு காணும் நரேந்திர மோடி, மதுரை எய்ம்ஸ் கனவை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேறாத கானல் நீராக மாறியது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

தமிழ்நாட்டு மக்களை கவர்வதற்காகவே வேட்டி, சட்டை அணிந்து திடீர் வேடம் தரித்திருக்கிறார். தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பிரதமர் மோடி, எத்தகைய வேடம் போட்டாலும் தமிழ்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள். தமிழ் மொழி, திருக்குறள், பாரதியார் மீது பற்று இருப்பதாக பாசாங்கு செய்கிற பிரதமர் மோடி, தமிழ் மொழி புறக்கணிப்பின் மூலம் அவரை யார் என்று தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

வரி பகிர்வினால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு கண்ணில் வெண்ணெயும், எதிர்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் கண்ணில் சுண்ணாம்பும் தடவுகிற போக்கைத் தான் வெளிப்படுத்துகிறது. திருச்சியில் பேசிய நரேந்திர மோடி திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை அளித்து அவர்களிடமிருந்து தேர்தல் பத்திர நன்கொடையாக ரூ.6565 கோடி. இத்தகைய நிதிகளை ஆளுங்கட்சியாக இருக்கிற பாஜகவுக்கு கார்ப்பரேட்டுகள் வழங்குவது ஊழல் இல்லை என்றால் எது ஊழல் என்பதை நரேந்திர மோடி விளக்க வேண்டும்.

எனவே, நரேந்திர மோடி ஆட்சி ஏழை,எளியவர்களுக்கு எதிரானது. கார்ப்பரேட்டுகள் சொத்து மேல், சொத்து குவிப்பது தான் நரேந்திர மோடி ஆட்சியின் சாதனையாகும். இத்தகைய மக்கள் விரோத ஆட்சிக்கு மக்கள் உரிய நேரத்தில், உரிய பாடத்தை புகட்டுவார்கள்.

Related Stories: