மதுரை மாவட்ட தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, கூட்டணி வர சொல்லி பாஜ அழுத்தம் கொடுக்கிறதா? சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளதன் மூலம் நெருக்கடி கொடுக்கப்படுகிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நிர்மல்குமார் கூறியதாவது: சிபிஐ விசாரணை தொடர்பாக நாங்கள் முழு ஒத்துழைப்பை தர தயாராக உள்ளோம். எங்களிடம் எதுவும் இல்லை. கடந்த வாரம் சம்மன் வந்ததையடுத்து, வேட்பாளர்கள் விருப்ப மனு மற்றும் நேர்காணல் காரணமாக சென்னைக்கு மாற்றி கேட்டுள்ளோம். விசாரணைக்கு விஜய் வரும் 15ம் தேதி மீண்டும் ஆஜராவார். இந்தியாவில் மிகப் பெரிய சக்தியாக உள்ள விஜய்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் நெருக்கடி வரத்தான் செய்யும்.
அதையெல்லாம் கையாண்டு மக்களிடம் சென்று தேர்தலை சந்திப்பார். தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரம் குறித்து, அவர்கள் தரப்பிலிருந்தும் எங்கள் தரப்பில் இருந்தும் தெளிவுபடுத்தி விட்டோம். இதுபோன்ற பேச்சுக்கள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. யூகங்களுக்கு தினமும் நாங்கள் பதில் சொல்ல முடியாது.
நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயார் செய்து கொண்டு வருகிறோம். எங்கள் தலைவரை முதல்வராக ஏற்றுக் கொண்டு யார் வருகிறார்களோ, அவர்களை தான் ஏற்றுக் கொள்வோம். நாங்கள் காங்கிரஸிடம் அதிகாரப்பூர்வமாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
மதுரையில் நான் போட்டியிடுவது குறித்து, விஜய் தான் முடிவு செய்வார்.
அவர் எங்கே நிற்க சொல்கிறாரோ, அங்கே நிற்க தயாராக இருக்கிறோம். யார் எங்கிருந்து நெருக்கடி கொடுப்பார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். சினிமாவுக்கு எப்படி நெருக்கடி கொடுத்தார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியும். இதையெல்லாம் தாண்டி தான் எங்கள் தலைவர் களத்தில் நிற்கிறார்.
360 டிகிரி கோணங்களில் நெருக்கடி வந்தாலும் அதையெல்லாம் கையாண்டு மக்களை சந்திப்பதில் முதன்மையாக இருப்பார். தேவையான இடங்களில் தானே பாஜவை விமர்சிக்க முடியும்? மற்ற நேரங்களில் பேச முடியாது. வக்புவாரிய விவகாரங்களில் தவறு இருந்ததால் கண்டித்தோம். இதுபோல் எங்கெங்கல்லாம் தேவைப்படுகிறதோ அங்கு தான் விமர்சிக்க முடியும்.
இது சட்டமன்றத்திற்கான தேர்தல். களத்தில் இல்லாதவர்களை பற்றி பேசி என்ன பிரயோஜனம்? திமுக, தவெகவை தவிர்த்து வேறு யாரும் இங்கு களத்தில் இல்லை. இப்போது எங்களுடைய வாக்கு சதவீதம் 40 ஆக உள்ளது. விஜய் தேர்தல் பிரசாரம் தொடங்கிய பின்பு அது 50 சதவீதமாக மாறும்.
இவ்வாறு கூறினார்.
* 6 சிலிண்டரு கொடுப்பீங்களா?
‘‘காஸ் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தவெக கூறியபடி 6 சிலிண்டர் தர வாய்ப்புள்ளதா’’ என நிருபர்கள் கேட்டதற்கு, நிர்மல்குமார், ‘‘கண்டிப்பாக அது சாத்தியமாகும். அதெற்கெல்லாம் எவ்வளவு செலவாகும் என பட்ஜெட் போட்டுத்தான் ஆறு சிலிண்டர் இலவசம், ரூ.2,500 பணம் மற்றும் ஒரு பவுன் தங்க நகை வழங்கப்படும் என விஜய் அறிவித்தார். 100 சதவீதம் வாக்குறுதிகள் பட்ஜெட் அடிப்படையில் தான் அறிவிக்கப்பட்டது. மிக விரைவாக அடுத்த கூட்டம் நடைபெறும்’’ என்றார்.
