அரசியலுக்காக திமுக மீது விமர்சனம்: அமைச்சர், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு

 

* திருச்சி மாநாடு, திருப்புமுனை மாநாடு என்பது வார்த்தை ஜாலத்திற்கு மட்டும் சொல்லப்படுகிறதா? அல்லது இந்த முறையும் அது வரலாற்றை படைக்குமா?

திருச்சியில் நடைபெற்ற இந்த மாநாடு வெறும் கூட்டமல்ல, இது ஒரு திருப்புமுனை மாநாடு. திமுக ஏற்கனவே பெற்றுள்ள வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு களமாக இது அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் நடத்தப்படும் மாநில மாநாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு திருச்சியிலேயே நடந்துள்ளன. ஒவ்வொரு முறையும் திருச்சியில் மாநாடு நடக்கும்போது, திமுக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வெற்றி பெற்றுள்ளது. எனவே, தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு இந்த மாநாடு ஒரு வலுவான அடித்தளமாக இருக்கும்.

* திமுகவிற்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள் அரசியல் நோக்கத்திற்காகவா? அவற்றை குறைகளை சுட்டிகாட்டுவதென எடுத்துக் கொள்ள கூடாதா?

திமுக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும் அரசியல் நோக்கத்திற்காகவே முன்வைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் குறைகளை மட்டும் சொன்னால் பரவாயில்லை, ஆனால் அவர்களுக்கு திராவிட இயக்கத்தின் கொள்கைகளே பிடிப்பதில்லை. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற சமூக நீதி கொள்கையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், திட்டமிட்டு இல்லாத குறைகளையும் சொல்லி அவதூறு பரப்புகின்றனர்.

* கூட்டணியில் பிரதானமாக உள்ள காங்கிரஸ்சுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மற்றுமுள்ள கட்சியினர் திருப்தி அடையும் வகையில் எப்போது உடன்படிக்கை இறுதி செய்யப்படும்?

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ​காங்கிரஸ், மதிமுக மற்றும் இஸ்லாமியக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது. ​​விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ​தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை முடிந்து, அவர்களுக்கு நாடாளுமன்ற மேலவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ​புதிதாக இணைந்துள்ள 12-13 கட்சிகளுடன் பேசி வருவதால், இன்னும் ஓரிரு நாட்களில் இடப் பங்கீடு இறுதி செய்யப்படும்.

* இந்த தேர்தலில், இளைஞர் அணியை சேர்ந்த பலருக்கு போட்டியிட அதிக வாய்ப்பும், மூத்தவர்களுக்கு வாய்ப்பை இழக்கும் சூழல் இருப்பதாகவும் பேச்சு நிலவுகிறதே… இப்படிப்பட்ட நிலையில் முதன்மை செயலாளராக இருக்கக்கூடிய உங்களது நிலைப்பாடு என்ன?

கட்சியில் மூத்தவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்ற கருத்து தவறானது. திமுக தலைவராக இருந்த கலைஞரும், இப்போதைய தலைவராக இருக்கும் முதல்வரும் எப்போதும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். நானே இளைஞர் அணியிலிருந்து வந்தவன் தான். மூத்தவர்களைப் புறக்கணிக்காமல், இளைஞர்களுக்கு தேவையான இடங்களில் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருவதே கட்சியின் நோக்கம். மூத்தவர்களும் இளைஞர்களும் இணைந்தே இந்த இயக்கத்தை வழிநடத்துவார்கள்.

Related Stories: