வந்தே மாதரம் குறித்த அரசின் உத்தரவு நீதிமன்றத்தை நாடுவோம்: முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி: வந்தே மாதரம் பாடல் குறித்த ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம் என்று முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டியது கட்டாயம் என்றும், மேலும் இதில் 6 சரணங்களும் பாடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா முகமது பஸ்லூர் ரஹீம் முஜாதிடி கூறுகையில், ‘வந்தே மாதரம் தொடர்பான உத்தரவை ஒன்றிய அரசு திரும்பப் பெறவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். ஏனெனில் இந்த முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது. மத சுதந்திரம் மற்றும் மதச்சார்பற்ற மதிப்புகளுக்கு எதிரானது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது மற்றும் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளுக்கு நேரடி முரண்பாடானது.

எனவே இந்த முடிவு முஸ்லிம்களுக்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்றார். ஜமியத் உலமா தலைவர் மவுலானா அர்ஷத் மதானி தனது எக்ஸ் தள பதிவில்,’முஸ்லீம்கள் யாரும் வந்தே மாதரம் பாடுவதையோ அல்லது இசைப்பதையோ தடுப்பதில்லை. ஆனால் பாடலின் சில வசனங்கள் ஒரு தெய்வமாக சித்தரிக்கும் நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டவை. இது தேர்தல் அரசியல். பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு திட்டமிட்ட முயற்சியை பிரதிபலிக்கிறது’என்று குறிப்பிட்டுள்ளார்.

* முதன்முதலாக அமல்படுத்தும் மத்தியபிரதேசம்
தேசிய கீதத்துக்கு முன் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவை மத்தியபிரதேச அரசு முதன்முதலாக அமல்படுத்த உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மோகன் யாதவ் நேற்று வௌியிட்ட அறிக்கை: பிரதமர் மோடியின் சிறந்த தலைமையில், தேசிய கீதமான ஜன கண மன பாடலுக்கு முன் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களை பாட ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவை மத்தியபிரதேசத்தில் செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு வந்தே மாதரம் பாடப்படுவது மூலம், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகம் நினைவு கூரப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: