சிறைவாசிகள் தொழில் செய்து வாழ்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது சிறைத்துறை டிஜிபி சங்கர் பெருமிதம் அலுவல்சாரா பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

வேலூர், மார்ச் 28: சிறைவாசிகள் திருந்தி வெளியில் சென்று சமுதாயத்தில் நல்ல தொழில் செய்து வாழ்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளதாக, வேலூர் ஆப்காவில் அலுவல்சாரா பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து சிறைத்துறை டிஜிபி சங்கர் பேசினார். வேலூர் தொரப்பாடி சிறை அதிகாரிகளுக்கான ஆப்கா பயிற்சி மையத்தில் சிறை நிர்வாகத்தின் செயல்பாடு குறித்தும், சிறையில் கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்தும் அலுவல் சாரா பணியாளர்களான தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. நிகழ்ச்சி துவக்க விழாவுக்கு ஆப்கா இயக்குனர் பிரதீப் தலைமை தாங்கினார். ஆப்கா குற்றவியல் பேராசிரியர் மதன்ராஜ் முன்னிலை வகித்து வழங்கப்படும் பயிற்சி குறித்து விளக்கினார். ஆப்கா துணை இயக்குனர் கோவிந்தராஜன் வரவேற்றார்.

பயிற்சி வகுப்பு துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சிறைத்துறை டிஜிபி சங்கர் கலந்து கொண்டு, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது: சிறைவாசிகளுக்கு தண்டனையை தாண்டி அவர்களின் மறுவாழ்க்கைக்கு அவர்கள் வெளியில் சென்ற பிறகு மீண்டும் சமுதாயத்தில் சேர்ந்து எப்படி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழலாம் என்ற ஒரு நவீன சிந்தனையை கொண்டுள்ளது. சிறை என்பது முற்றிலும் மூடப்பட்ட ஒரு இடம், அங்கு சிறை அலுவலர்கள், நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டவர்கள் மட்டும்தான் செல்ல முடியும். இந்நிலையில் சிறை நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக சிறை வேலையை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் கலெக்டர், எஸ்பி, நீதிபதி போன்ற அரசு சம்பந்தபட்டவர்கள் இருப்பார்கள். இந்நிலையில் சமுதாயத்திற்கும் இதில் ஒரு பங்கு உள்ளது என்பதற்காக உங்களை இக்குழுவில் சேர்த்துள்ளார்கள். சிறை நிர்வாகத்தில் ஒரு வெளிப்படை தன்மை வேண்டும் என்பதே அதற்கு காரணம்.

சிறை அதிகாரிகள் சிறைவாசிகளை பார்க்கும் பார்வை வேறு வகையில் இருக்கும். உங்கள் பார்வை வேறுவிதமாக இருக்கும். உங்களுக்கு சட்டத்தில் ஒரு அங்கீகாரம் உள்ளது. அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறையில் உள்ள சமையலறை, கழிவறை, குடிநீர் வசதி, மருத்துவமனை முறையாக சிகிச்சை அளிக்கிறார்களா? என்பனவற்றையெல்லாம் நீங்கள் பார்க்கலாம். சிறைவாசிகள் விடுதலையாகி வெளியில் சென்று பல்வேறு தொழில்களை செய்கிறார்கள். இதில் ஒரு தனியார் நிறுவனம் இந்திய அளவில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், சிறைவாசிகள் திருந்தி வாழ்வதற்கு மட்டுமில்லாமல் அவர்கள் வெளியில் சென்றால் தொழில் செய்து பிழைப்பதற்கும் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வேலூர் சிறையை பொறுத்தவரை தரமான ஷூ மற்றும் காலணிகளை செய்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். பயிற்சி வகுப்பில் 50க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: