அமைச்சர் துரைமுருகன் காரில் பறக்கும் படையினர் சோதனை தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற

பொன்னை, ஏப். 2: தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற அமைச்சர் துரைமுருகன் காரில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அமைச்சர் துரைமுருகன் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல் நேற்று காலை பொன்னை அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரில் எம்பிக்கள் ஜெகத்ரட்சகன்(அரக்கோணம்), கதிர்ஆனந்த்(வேலூர்), காட்பாடி ஒன்றியக்குழு சேர்மன் வேல்முருகன் உள்ளிட்டோர் இருந்தனர். பொன்னை நான்கு ரோடு பகுதியில், அமைச்சர் துரைமுருகன் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக்குழு அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அலுவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். சுமார் 10 நிமிடங்கள் இந்த சோதனை நடைபெற்றது. பின்னர் அமைச்சர் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Related Stories: