வேலூர், ஏப்.2: ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கான அனைத்து வசதிகளையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நடப்பு தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் ஒரு வாக்குச்சாவடி அமைப்பது அவசியம் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை அமைப்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. அதன்படி, தனிப்பட்ட பெண் வாக்காளர்கள் அல்லது பர்தா அணியும் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் இடங்களில் குறைந்தது ஒரு பெண் வாக்குச்சாவடி அலுவலர் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையில் அதிகளவிலான பெண்கள் ஆக்கப்பூர்வமான முறையில் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பெண் அலுவலர்களுக்கும் அவர்கள் தங்குவதற்கான வசதி மற்றும் போக்குவரத்திற்கான ஏற்பாடு குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.
பெண் பணியாளர்களை, கணினியில் வாக்குச்சாவடி சம வாய்ப்பிற்குட்படுத்தும் நடைமுறையின் அடிப்படையில் பணியமர்த்தக்கூடாது. தேர்தல் பார்வையாளரின் வழிகாட்டுதலின் கீழ் கணினி அல்லாது நேரடியாக சமவாய்ப்பிற்குட்படுத்தும் முறை வாயிலாக அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் அவர்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளை பொறுத்தவரை, மாற்றுத்திறனாளியால் நிர்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தப்பட வேண்டிய அவசியம் இருந்தாலன்றி, 2016ம் ஆண்டு மாற்றுத்திறனாளி உரிமைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள மதிப்பீட்டளவிலான இயலாமையுடைய நபர்கள் என்ற மாற்றுத் திறனாளி வகைப்பாட்டின் கீழுள்ள பணியாளர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை தேர்தல் பணியில் பணியமர்த்தக் கூடாது.
மாவட்டத் தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலரின் மனநிறைவிற்குட்பட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ள இயலாத வகையில் உடலளவில் இயலாமையுற்ற நபர்களுக்கு (பார்வை குறைபாடுடைய, குறைவான செவித்திறன் உடைய, பார்வையற்ற. குறைவான பேச்சுத்திறனுடைய நபர்கள் ஆகியோர் உட்பட) விலக்களிக்கப்பட வேண்டும். தேர்தல் பணியில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நேர்வில் அவர்களுக்கு தொலைதூர பகுதிகள் அல்லது கடினமான அமைவிடங்களில் பணி ஒதுக்கீடு செய்யப்பட கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
