வேலூர், மார்ச் 31: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் முதல் நாளான நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 13 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (30ம் தேதி) தொடங்கியது. வரும் 6ம் தேதி வரை மனுதாக்கல் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று வேலூர் மாவட்டத்தில், வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஏ.சோனியா, தவெக சார்பில் எம்.எம்.வினோத்கண்ணன், சுயேச்ைசகள் உட்பட 7 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கே.வி.குப்பம்(தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.கலையேந்திரி, காட்பாடி தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.திருக்குமரன், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெ.இமலன், வி.வினோத்குமார் ஆகிய 2 பேர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.ரவிகுமார், எம்.பால்ராஜ் என 2 பேர் என மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 13 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அணைக்கட்டில் மனு தாக்கலையொட்டி டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உட்பட 60 போலீசார், துணை ராணுவவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்தவர்களை உரிய விசாரணை நடத்தி அலுவலகத்திற்குள் அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
